4. சோழ னல்லுருத்திரன். 27


நிற்பவரென்றும் ஏறு தழுவும் விழாவைக் கொண்டாடுபவரென்றும் அதற்குப் பறையறைவிப்பவ ரென்றும் அவ்விழாவில் தழுவவிடும் ஏறுகளின் கொம்புகளை மிகக் கூரியனவாகச் சீவிவிடுபவ ரென்றும் மிகுந்த சினமுடைய வலிய கொல்லேறுகளையும் அஞ்சாது தழுவுபவரென்றும் தழுவுங்கால் நீர்த்துறைகளிலும் மரத்தினடிகளிலுமுள்ள தெய்வங்களை முறையாகத் தொழுபவரென்றும் கறத்தற்கரிய பசுக்களைக் கறத்தற்குரிய கழு என்னுங் கருவியையும் சூட்டுக்கோல் உறி முதலியவற்றையும் உடையவரென்றும் கொன்றைக் குழல் ஆம்பற்குழல் முதலியவற்றை ஊது பவரென்றும் மணஞ்செய்யுங் காலத்தில் வீட்டிற்குச் செம்மண்பூசி இளமணல் பரப்பிப் பெண்ணெருமைக் கொம்பைத் தெய்வமாக வழிபடுபவ ரென்றும் தாதெருமன்றத்துக் குரவை ஆடுபவரென்றும் தெய்வ பத்தியும் இராசபத்தியு மிக்கவரென்றும் கூறியிருக்கிறார்.

ஆயச்சிறுமியர், நீலவாடையுடுத்துக் குழைமுதலிய அணிகளை அணிந்து தோட்டங்களில் ஆயத்தோடு சிற்றிலிழைத்து முல்லைமலர் முதலியவற்றைக் கொய்து கோதையும் இழையும் தழையும் புனைந்து இன்பமாக விளையாடி வந்தனரென்றும் கன்றுகளை மேய்த்துக் கட்டினரென்றும் தமர்க்கு உணவு முதலியன கொண்டுபோய்க் கொடுப்பவரென்றும் கொல்லேற்றை அஞ்சாது தழுவும் வீரமுடைய ஆயரையே மணக்கவிரும்பி அவர் ஏறு தழுவுதலைப் பரண்மீதிருந்து பார்த்து வந்தனரென்றும் தாம் மணக்கவிரும்பியவரது மாலையைத் தாம் மறைவாகச் சூடினரென்றும் தம்முடைய களவொழுக்கம் தாயர்க்குத் தெரியக்கூடாதென்று அஞ்சி மறைத்துவந்தன ரென்றும் தாம் விரும்பின கணவரைத் தம்மையீன்றவர்களின் உடம்பாடு பெற்றே மணப்பரென்றும் இருமணங் கூடாரென்றும் தெய்வங்களுக்குப் பால்மடைகொடுப்பவ ரென்றும் தயிர் கடைபவரென்றும் வெண்ணெய் தேய்த்துக்கொள்பவ ரென்றும் தயிர்மோர் விற்பவரென்றும் கூறியிருக்கிறார்.

வெள்ளை, சில்லை, சேய் (செந்நிற ஏறு), காரி (கருநிற ஏறு), குரால் ( - செங்காரி), புகார் (கபிலநிறஏறு) புள்ளி வெள்ளை ( - புள்ளிகளையுடைய வெள்ளேறு, ஆகிய ஏறுகளையும் பலநிறங்கலந்த ஏறுகளையும் அவற்றின் சினமும் விரைந்துவருகையும் மேம்பாடும் இயல்புந் தோன்றக்கூறிப் பாராட்டியிருத்தல் படித்து இன்புறற் பாலது.

கொல்லேறு தழுவுஞ் செய்தியைப் பழைய நூல்களுள் இந்நூலிற்போல வேறு நூல்களால் அறிய இயலாது.

மரா ஆல் கடம்பு கொன்றை குருந்து காஞ்சி வெட்சி காயாபிடவு குல்லை கோடல் தோன்றி பாங்கர் நறவு முல்லை தளவு முதலிய மரஞ் செடிகொடிகளை இவர் எடுத்துரைத்திருக்கின்றார்.