‘பெருங்கடுங்கோன் பாலை........................அருஞ்சோழ, னல்லுத்திரன் முல்லை’ என்னும் வெண்பா, இன்ன இன்ன திணையை இவரிவர் பாடினாரென்று கூறுதல். 3. இந்நூலுரையில் நவ்வந்துவனாரைப் பற்றியுள்ள வாக்கியங்களும் ‘நாடும் பொருள்சான்ற’ என்னும் வெண்பாவும் அவர் நெய்தலைப்பாடினாரென்பதற்கும் இந்நூலைத் தொகுத்தாரென்பதற்குமே பொருத்தமாதல். இவற்றால் எட்டுத்தொகையுள் ஒருவருரைத்த தொகை நிலைச் செய்யுள் ஒன்றுமின்றென்பதும் அவர் கருத்து ஆதாரமற்றதென்பதும் இவை முறையே சேர சோழர்களாற் பாடப்பெற்று நூல் முற்றும் நவ்வந்துவனாரால் தொகுக்கப்பெற்றதென்பதும் புலனாம். இவர் இந்நூலில் பாண்டியனைப் புகழ்ந்திருத்தலன்றியும் அவனாட்டிலுள்ள வையையாறு மதுரைமாநகர் பரங்குன்று முதலிய இடங்களையும் அந்நாட்டுக்குச் சிறப்பாகக்கூறப்படும் முத்து, சந்தன முதலிய பொருள்களையும் மதுரையில் தமிழாராயும் செய்தியையும் பாராட்டிக்கூறுதலால் இவர் இளமையில் பாண்டியனால் அன்புடன் ஆதரிக்கப்பெற்று அங்கிருந்து பழகியவரென்று ஊகிக்கலாம். நற்றிணையில் கொண்கானத்து நன்னனாட்டு எழிற்குன்றம் சிறப்பிக்கப் பெற்றிருத்தல் அஃது அதற்கேற்ற பெற்றித்தாதல் கருதியென்று தோற்றுகிறது. இவர் வரலாற்றில் இன்னும் கூறத்தக்க செய்திகள் பலவுள வேனும் அதற்கு இப்போது அவகாச மின்மையால் இம்மட்டோடு நிறுத்தலானேன்.
|