1. பாலைபாடிய பெருங்கடுங்கோ 13


அன்றியும் இவர் புராணம் விலங்குநூல் தாவரநூல், நிமித்த நூல் ஓவிய நூல் இசை நூல் முதலியவற்றையும் அறிந்தவரென்றும் இயற்கை நவிலுதல், உறுதி புகலுதல், மெய்ப்பிக்கும் திறம்பகருதல் இவற்றில் வல்லுநரென்றும் தாம் ஆளும்நாட்டிற்கு உரித்தாகக் கூறப்படும் யானையினியல்பை யறியுந் திறம், அது மதம்பட்ட காலத்தில் அதனை அடக்கவல்ல யாழ்ப்பயிற்சி இவற்றையும் தெய்வபத்தி, வைதிகவழியில் நம்பிக்கை, கொடை, வீரம், சேர்ந்தவர் பாலன்பு, நன்றியறிதல் முதலிய நற்பண்புகளையு முடையவரென்றும் இவர் ஆங்காங்குக் கூறியிருப்பவை நினைப்பிக்கும்.

இப்பாலைக் கலியிற் சிலஇடத்தும் முல்லைக்கலியிற் சிலஇடத்தும் பாண்டியன் புகழ் கூறப்படுகிறது. அதனை நோக்கி ஓரரசர் மற்றோரரசரைப் புகழாரென்று தமக்குத் தோன்றுங் கருத்தையே ஓராதாரமாகக் கொண்டு இப்பகுதிகள் சேரசோழர் பாடியன அல்ல; நூல் முற்றுமே நவ்வந்துவனார் பாடியதென்று சிலர் வரைகின்றனர்.

எட்டுத் தொகையுள் இஃதொழிந்த ஏழும் பலர் செய்யுட்களை யுடையனவா யிருத்தலால் இது மட்டும் அவ்வாறன்றென்பதற்கு என் மனம் அஞ்சும். நான் காட்டிய இக்காரணமன்றியும் இன்னு மூன்று காரணங்களைக் கொண்டும் அவர் கருத்துங் கூற்றுமாகிய இரண்டும் ஒன்றாவென்று நினைக்கிறேன்.

மூன்று காரணம்.

1. அரசர் பிறரைப் புகழக் கூடாதென்னும் விதி எங்கேனு முள்ளதா? நற்பண்புடைய அரசர், புகழத் தக்கவராய்ப் பிறரிருப்பின் அவரைப் புகழாது இகழ்வாரா? முடியுடை வேந்தர்தங்குடியொரு மூன்றினும், உதித்தர சாண்டிவண் மதித்த மேன்மையினர் அப்பான்மையிலரைப் பாராட்டியுள்ளா ரென்பது இச்சேரனே கொண்கானத்து நன்னனையும் (நற். 391) சோழன்குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறுகுடிகிழான் பண்ணனையும் (புறம். 173.) ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் மையன் மாவன் முதல் நண்பர், ஐவர் தமையும் (புறம். 71) புகழ்ந்ததன்றிப், பொதியிற் செல்வன் திதியனையும் (அகம். 25) புகழ்ந்தா ரென்று திகழ்ந்திடலின் அவர் கருத்துப் பொருந்தாமை.