4 மூன்றாஞ் சம்புடத்தின் முகவுரை


இந் நூல்போல முழுமைக்கும் பண்டை யுரையாசிரியரால் உரையோடு மெய்ப்பாடு குறிக்கப்பெற்ற நூல் திருக்கோவையாரொன்றுமே. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், தொல்காப்பிய முதலிய இலக்கணம் இவற்றினுரைகளில் மெய்ப்பாட்டுக் குறிப்புச் சிலவுண்டு. அவற்றாலும் இம் மெய்ப்பாட்டுச் செய்திகள் விளங்குவனவாக இல்லை. தமிழிற் சிறந்த நூல்களைப் பாடமாக்கி அவற்றைச் சிறு பொருட்செலவில் பல வருடமாகக் கற்பித்து வரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலோ, தக்க பொருட்செலவுசெய்து சில வருடமாகக் கற்பித்து வரும் சிதம்பரம் அண்ணாமலைச் சருவகலா சங்கத்திலோ, வேறிடத்திலோ நுண்ணறிவும் உலையா முயற்சியுமுடைய தமிழ்ப்புலவர் போதகாசிரியராயிருந்து பல்லாண்டு உழந்தால் நாளடைவில் விளங்கக்கூடுமென்பதும் அதற்கும் ரஸபாவ முதலியவற்றை நுண்ணிதி னறியும் வடநூலுணர்ச்சியாவது அவற்றை அறிந்தவ ருதவியாவது இன்றியமையாததென்பதும் என் கருத்து.

இம்மூன்றாஞ் சம்புடத்தைப் பதிப்பிப்பதற்குப் பொருளுதவி செய்ய வேண்டுமென்ற என் வேண்டுகோளை அங்கீகரித்து, சென்னைச் சருவ கலாசங்கத்தார் இந்நூலை நிறைவேற்றி 750 ரூபாய் பெறும் படி உத்தரவளித்தார்கள். முன்பு பிரஹ்மஸ்ரீ மகாமகோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி உ. வே. சாமிநாதையரவர்கள் 150 ரூபாய் அளித்தபோது 
அத்தொகை இத்தொகையிலுள்ள செய்யுள் (கலித் தொகையிலுள்ள செய்யுள் 150 ஒவ்வொன்றையும் தாம் பாராட்டுவதற்கு அறிகுறியாகத் தோற்றுகிற தென்று குறித்திருந்தேன். இச் சருவகலா சங்கத்தார் உத்தரவிட்ட தொகை, அத்தொகைபோல ஐந்து மடங்கு கொண்டதா யிருத்தலால், ஐந்திணை நெறியளாவிய இக்கலித்தொகைக்கு அத்தொகை போல ஐந்து மடங்கு இணைந்த தொகை அளித்தலே ஏற்ற நெறியாகுமென்று கருதினர் எனக் குறிக்கும்படி இருக்கிறது.

ஆறாந்தொகையீ தாதலினால் ஐயரவர்க ளளித்ததினும்
வீறாம் வண்ணம் நூறாக மேவுந் தொகையில் ஆறுறழ்ந்து
கூறாந்தொகைநூற் றைம்பதொடுங் கூட்டினார்கொல்.

இவ்வுதவியைச் செய்த அவர்கட்கு என் நன்றியறிதலைக் கூறுகிறேன்.

பின்பு சிதம்பரம் அண்ணாமலைச் சருவகலா சங்கத்தாருக்கு ஒரு மனுச் செய்துகொண்டேன். அச்சங்கத்தார் 300 ரூபாயை முன்னதாகவே அனுப்பித் தங்களுக்குப் பத்துப் பிரதி போதுமானவை யென்றும் தெரிவித்தார்கள். இது காலத்தாற் செய்த உதவியாய் மகிழ்வித்தது.