கணபதி துணை. மூன்றாஞ் சம்புடத்தின் முகவுரை. இந் நூலையும் இப்பதிப்பையும் பற்றிய செய்திகள் பலவும் இதன் முதற் சம்புடத்தின் தலைப்பில் எழுதப்பெற்றுள்ளன. இம் மூன்றாஞ் சம்புடத்தில், நெய்தற்கலியும் அரும்பத முதலியவற்றின் அகராதியும், நூலாசிரியர் உரையாசிரியர்களின் வரலாறுகளும், முன்னிரண்டு சம்புடங்களிலின்றி இச்சம்புடத்தில் எடுத்துக் காட்டப்பெற்ற நூற்பெயர் முதலியவற்றின் அகராதியும், இப் பதிப்பைப்பற்றிய அபிப்பிராயங்களில் முன் வெளிவாராதவையும் அடங்கியிருக்கின்றன. இச் சம்புடத்தோடு இந்நூல் நிறைவேறிற்று. இச் சம்புடத்துள்ள நெய்தற்கலியும், இதன் இன்ன பகுதி இன்ன நூலின் இன்ன பகுதியில் இன்னதற்கு மேற்கோளென்பதும் இதன் இன்ன பகுதிக்கு ஒப்புமைப் பகுதி இவையென்பதும் முதலிய குறிப்புக்களோடு, இரண்டாஞ் சம்புடத்தைப்போலவே சொற்களையும் விலங்கு பறவை மரஞ் செடிகொடிகளையும்பற்றிய பலவகைக் குறிப்புக்களும் சேரப்பெற்றது. இக் குறிப்புக்கள் ஆராய்ச்சியாளர்க்குப் பெரிதும் பயன்படுவனவாயிருக்கும். அரும்பத முதலியவற்றின் அகராதியில் பழைய செய்திகளை அறிவிக்கவேண்டிப் பல தொடர்மொழிகளும் சேர்க்கப்பெற்றிருக்கின்றன. சில அரும்பதங்களுக்குப் பொருள்களும் குறிக்கப்பெற்றிருக்கின்றன. அவ்வகராதியில் மெய்ப்பாடு என்னுமிடத்து அவற்றின் பெயர்களைமட்டும் ஓர் அகராதியாகக் குறித்திருக்கிறேன். அதற்குக் காரணம் பொருளதிகாரம் உணர்ந்தவர் சிலரென்பதும், அவருள்ளும் இம் மெய்ப்பாட்டைப்பற்றிய செய்தியைத் தெளிவாக உணர்த்தவல்லவ ரிலரென்பதும், தாமே பயின்றுணா விரும்புவார்க்கு இது கருவியாயுதவுமென்பது மாகும். இம் மெய்ப்பாட்டுப் பெயர்களுள், சில பெயர் ஒவ்வொரு மெய்ப்பாட்டுக்குக் காரணமான குறிப்புக்கள் அல்லது பொருள்களின் பெயரென்றும், சிலபெயர் மெய்ப்பாட்டுக்குக் காரணமான பொருட் பெயரோடு சேர்த்தெழுதப்பட்டன வென்றும், சில பெயர் பரியாயப் பெயர்களென்றும், சில பெயர் பிழைபட்டிருக்கக்கூடுமென்றும் தோற்றுகின்றன.
|