தொகை யென்பதற்குத் தொகுக்கப்பட்டதென்பது
பொருளாதலாலும், எட்டுத்தொகையுள் இஃதொழிந்த
மற்றவைகள் யாவும் பல புலவர்களாலேயே யாக்கப்பெற்றிருப்பதாலும்,
இதுவும் மேற்கூறியபடி ஐந்து புலவர்களாலேயே யாக்கப்பெற்று,
பின்பு அவர்களுள் ஒருவராகிய நவ்வந்துவனாராலே
தொகுக்கப்பட்ட தென்றுகொள்ளுதலே தகுதியாம்.
இதனை,
‘‘பெருங்கடுங்கோன்
பாலை 1கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருத-மருஞ்சோழ
னல்லுத் திரன்முல்லை 2நவ்வந் துவனெய்தல்
கல்விவலார் கண்ட கலி’’ |
என்ற வெண்பா வலியுறுத்தும்.
இதனைத் தொகுத்தவரது இயற் பெயர்
‘‘அந்துவன்’’ என்பது. இவர் கல்வி
கேள்வியில் வல்லுநரான பிறகு, நக்கீரனார், நப்பூதனார்,
நத்தத்தனார் என்றாற்போல, இவர் பெயருக்கு முதலில்
‘ந’ என்னும் சிறப்புப் பொருளை யுணர்த்தும்
இடைச்சொல்லையும் ஈற்றில் உயர்வு
குறித்துவரும் ‘ஆர்’ என்னும் இடைச்சொல்லையும்
சேர்த்து, அப்பெயர்ச்சொல்லை இவற்றின்
இடைச்சொல்லாக்கி ‘‘நவ்வந்துவனார்’’ என
வழங்கப்பெற்றாரென்றும், அது நாளடைவில் பல
ஏடுகளில் லகர வகரங்களின் வேற்றுமை விளங்க
எழுதப்பெறாமையால் வகரத்தை லகரமெனமயங்கி,
‘‘நல்லந்துவனார்’’ என்று பதிப்பிக்கப்பெற்று
அவ்வாறே வழங்கலாயிற்றென்றும் தோற்றுகின்றன.
‘நற்கீரன்’ என்று சிலகாலத்துக்குமுன் வழங்கிய
பெயரை உண்மையறிந்த பிறகு உலகம் ‘நக்கீரன்’
என்று வழங்குவதுபோல இதனையும் இனி நவ்வந்துவனென்று
வழங்குமென்பது என்கருத்து. நல்லுருத்திரன் என்பதுபோல
நல்லந்துவனெனக் கொள்ளின் ஒருவாறு பொருள்
படுமேனும் அஃது இத்துணைச் சிறப்புடையதாகாது. இது
நிற்க,
நான், மேற்கூறப்பட்ட ஸ்ரீமான்
சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் பதிப்பித்த
கலித்தொகையை ஊன்றிப் படிக்குங்காலத்தில்,
பலவிடத்து மூலமும் உரையும் செய்திகளும்
பொருந்தாமை கண்டு, பல்வேறு வழிகளில் மிகமுயன்று
அவற்றின் உண்மைகளை யறிந்து அமைத்துக்கொண்டேன்.
அவற்றுட் சிற்சில, பிரஹ்மஸ்ரீ மஹா மஹோபாத்தியாயர்,
உ. வே. சாமிநாதையரவர்களுடன் நான் வேறு நூலாராய்ச்சி
செய்யுங்காலத்தில், அவர்களிடம் சொல்லும்படிநேர்ந்தன.
அவற்றைக்கேட்டபொழுது, அவர்கள், ‘இவ்வரிய
விஷயங்கள் விளங்கும்படி குறிப்புக்களெழுதி
நீங்கள் இந்நூலைப் பதிப்பிக்கவேண்டும்’
(பிரதிபேதம்)
1. குறிஞ்சி கபிலன்.
2. நல்லந்துவனெய்தல்.
|