என்று சொன்னார்கள். பின்பு சென்னைப் பிரஸிடென்ஸி
காலேஜ் ஸம்ஸ்கிருதம், கம்பாரெடிவ் பைலாலஜி
இவற்றின் புரொபெஸரும் வெர்னாகுலர் ஸூபரின்டென்டென்டுமாகிய
பிரஹ்மஸ்ரீ எஸ். குப்புஸ்வாமி சாஸ்திரிகளவர்கள்
எம். ஏ. ஐ. இ. எஸ், ‘உங்களுக்கு அவகாசங்கிடைக்கும்போது
பழைய தமிழ் நூல்களை ஆராய்ச்சிசெய்து லோகோபகாரமாகப்
பதிப்பிக்கவேண்டும்’ என்று சொன்னார்கள்.
பின்பு வேறு சில அன்பர்களும், ‘கலித்தொகை
கிடைக்கவில்லை; அதனை நீங்கள் திருத்தமாகவும்
விளக்கமாகவும் பதிப்பிக்கவேண்டும்’ என்று
என்னைத் தூண்டி வந்தார்கள். அதனால் இத்தொகையைப்
பற்றி நான் குறித்திருந்த குறிப்புக்களை ஒன்றுசேர்க்க
வேண்டுமென்ற எண்ணமுண்டாயிற்று. அவ்வெண்ணத்தால்
நான் முன்பு பல நூல்களைப் படித்தபோது இதில்
எனக்குள்ள ஈடுபாட்டினால் அவற்றில் இக்கலிப்பா
மேற்கோளாவது, இதன் சொற்றொடராவது, இதற்கொத்த
பொருளாவது கண்டவிடத்து எழுதிவைத்திருந்த
குறிப்புக்கள் யாவற்றையும் எடுத்துச் சேர்ந்துவந்தேன்.
அவ்வாறு செய்கையில் மறதி அயர்ச்சிமுதலியவற்றால்
சில விடுபட்டன. அவைபோக எஞ்சியவற்றைத்
தொகுத்தெழுதி மூலம் அல்லது உரையில் ஆங்காங்கு
அடிக்குறிப்பாக அமைத்து இதனை ஒருவாறு பதிப்பிக்கலானேன்.
இப்பதிப்பிலுள்ள
விசேடம்.
1. பல ஏட்டுச்சுவடிகளோடு ஒப்பிட்டதனாலும்
வேறு நூல்களை ஆராய்ச்சி செய்ததனாலும், ஐயமுற்றவிடத்து
அறிவால் நெடிது சூழ்ந்து துணிந்ததனாலும் மூலமும்
உரையும் பல திருத்தமடைந்திருத்தல்.
2. உரையாசிரியர், பாடல்களைப்
பகுத்துக்கொண்டு உரை யெழுதியிருக்கும் இடங்களில்
அவ்வுரைகளுக்குமுன் அவற்றுக்கு மூலமான பாடற்பகுதிகளை
மீட்டும் பதிப்பித்திருத்தல்.
3. பிரதி பேதங்களுள் சிறந்தவற்றைப்
பாடமாகக் கொண்டு மற்றவற்றையும், பலவும் சிறந்தனவென்று
தோற்றின் ஒன்றைப் பாடமாகக் கொண்டு மற்றவற்றையும்
பிரதிபேதமென்று பக்கத்தினிறுதியிற்
குறித்துக் காட்டியிருத்தல்.
4. இப்பாட்டு, அல்லது இப்பகுதி,
இன்ன நூலில் இன்ன பகுதியில் இன்னாருரையில்
இன்ன செய்திக்கு மேற்கோளென்பதையும், அங்கே
குறிப்பு வேறுபட்டிருந்தால் அவ்விவரத்தையும்,
பிறர் கருத்தை மறுப்பதாகத் தோன்றின்
அதனையும், முன்பின் முரணுவதாகத்தோன்றின்
அதனையும் ஆங்காங்கு எண்களிட்டுக்
குறித்திருத்தல்.
|