முகவுரை

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டனுள் ஐந்திணை நூற்கள் நான்கினுந் தலைசிறந்து விளங்குவது திணைமாலை நூற்றைம்பது என்பதே யாகும். இதன்கண் தொல்காப்பியர் கண்ட பல அரிய அகப்பொருட் டுறைகள் செம்மணிக ளெனத் திகழ்கின்றன. மேலும், கோவை நூல்களிற் காணப்படும் பல்வகைத் துறைகளிற் பெரும்பான்மை, ஈங்குப் பிறங்கல் விளக்கே போல் பிறங்கிடு முறைமை கற்றோர் நெஞ்சங் கவருந் திறத்ததாம் இஃது எம் மொழியுங் காணா இலக்கணமாகிய பொருளின் கண்ணதாகிய அகத்திணையைக் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் எனப் பகுத்து விளக்கிச் செல்லாநின்றது, ஒவ்வொரு பகுப்பின்கண்ணும் முப்பது பாக்களாக ஐந்து பகுப்புக்களிலும் நூற்றைம்பது பாக்களைக் கொண்டு திணைமாலை நூற்றைம்பது என்ற பெயர்க்குப் பொருந்துமாறு இந்நூல் காணப்பட வேண்டுமாயினும், அங்ஙனமன்றிக் குறிஞ்சி முப்பத்தொன்றும், நெய்தல் முப்பத்தொன்றும், பாலை முப்பதும், முல்லை முப்பத்தொன்றும், மருதம் முப்பதுங்கொண்டு மொத்தம் நூற்றைம்பத்து மூன்றாகப் பாக்கள் பரவப் பெற்றுள்ளது; பாயிரமொன்று இறுதியிற் புறவுரையாகப் போற்றப் பெற்றுளது,

நாலைந்திணை நூல்களின் நாயகமாகிய இத்திணைமாலை நூற்றைம்பது அகப்பொருளின் அமைதியாகிய அன்பினைத் துறந்தோரும் போற்றும்வண்ணம் பலபடியாகப் பகர்ந்திருக்கு முறை, பாவலரும் நாவலரும் பரிந்து கொண்டாடும் பான்மையதாம். இதனாலன்றோ, பாயிரத்தின் கண்ணும், "முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக்கனிந்தர்,” எனக் காணப்பட்டுளது. அன்பின் ஆணிவேராகிய புணர்ச்சியின் போக்கினை முன்னர்க்கூறி, அன்பின் முதிர்வாகிய இரங்கலையும், இரங்குதற்குக்