கதைச் சுருக்கம்

பார் முழுதும் புகழும் பரதகாண்டத்தில் வடநாடு தென்னாடு என்ற இருபிரிவுளது. அவ் வடநாட்டுட் சிறந்த நாடுகளிற் 'கோசல நாடு' என்பதும் ஒன்று. அந்நாட்டின் தலைநகரம் அயோத்தியாம். அயோத்தியிலமர்ந்து அரசுபுரிந்த மன்னர் பலர். அவருள் 'அரிச்சந்திரச் சக்கரவர்த்தி' என்பவன் வாய்மையினும் வண்மையினும் வீரத்தினும் தீரத்தினும் சிறந்த மன்னன். அவன் தன்னுயிர்போல மன்னுயிர்களைப் புரப்பவன். அமைச்சர் சூழ்ச்சி யுரைவழியே செங்கோல் வழுவாது அரசு செலுத்தி வாழ்ந்தான்.

அரிச்சந்திரன் அரசுபுரியுங்காலத்தில் ஒருநாள் சில மாதவமுனிவர் வந்தனர். 'எங்கிருந்து நீவிர் வருகின்றீர்?' என வினவினன் வேந்தன். 'பல நாடுகட்குச் சென்று ஆங்காங்குள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் கண்டு வருகின்றோம் நாம்' என்று விடை கூறினர். 'சென்ற இடங்களிற் சிறந்த நிகழ்ச்சி ஏதேனும் கண்டதுண்டோ கூறுமின்!' என்றான் மன்னன். முனிவரிலொருவர் மொழியத் தொடங்கினர்: "கன்னோசி நாட்டிற்குச் சென்றோம்; கண்டகி என்ற தீர்த்தம் படிந்தோம். அந் நாட்டு வேந்தன் சந்திரதயன் என்னும் பெயருடையவன். அவன் முன்னர்ச் செய்த அருந்தவத்தாற் பிறந்த பெண்ணணங்கின் பெயர் சந்திரமதி. அவள் பொற்பும் கற்பும் நற்பண்பும் எம்மால் எடுத்துக் கூறும் அளவினவல்ல. மன்னர் பலரும் அன்னவளை மணக்கக் கருதி வருவதும் போவதுமாக உழல்கின்றனர். தந்தை சந்திரதயன், 'எம் கடவுள் கூறியபடியே மணமுடிக்கக் கருதுகின்றேன்; உங்கட்கு மணமுடிக்க உடன்படேன்' என்று கூறி விடுப்பதாக அறிந்தனம். நின் தோள்களுக்கிசைந்த வாழ்க்கைத்துணைவி அவளேயாவாள்" என்றார்.

முனிவர் கூறிய மொழி வழியாக வந்து செவிவழிப் புகுந்து உள்ளத்தை யுறைவிடமாகக் கொண்டாள் சந்திரமதி. அரிச்சந்திரன் சந்திரமதிமீது காதல் கொண்டு மயங்கினான். பின்னர்த் தெளிந்து அம் முனிவரை நோக்கி, 'அடியேனுக்கு அம் மங்கையை மணம்புரி வித்தல் வேண்டும்' என்று வேண்டினன். முனிவர் 'நாம் யாது செய்ய இயலும்? எம்மாற் செய்ய இயல்வதைச் செய்வோம்' என்றனர். 'நீங்கள் சென்று சந்திரதயனிடத்தில் என் விருப்பத்தைக் கூறி, அவனுரைக்கும் மொழியை எனக்குக் கூறுவீரானால் அதுவே போதும்' என்றான் அரிச்சந்திரன். உடனே எழுந்து மதிதயனைக் கண்டனர் முனிவர். மதிதயன் முனிவரை வணங்கி