- 116 -

இருவினைகளாகிய அழுக்கினைக் கழுவிக் கொள்ளும் தன்மை யுடையராவர்,  (அதுவேயுமன்றி  அவர்களை) மெய்வகை தெரிந்து-(உயிர் முதலிய) தத்துவக் கூறுகளைத் தெளிந்து, மாற்றை  வெருவினர் வீட்டை-பிறவிச் சுழற்ச்சியை அஞ்சித் துறந்தா ரெய்தும் வீடு பேற்றினை எய்தும்-எய்தக் கூடிய,  செவ்வியராகச் செய்து-பக்குவ முடையவராகச் செய்து, சிறப்பினை  நிறுத்தும்-இம்மை யில் தேவர்களா லியற்றுஞ் சிறப்பினையும் நிறுவப்பண்ணும். (எ-று.)

இதனைக் கேட்பார் வினைநீங்கி வீடு  அடைவார் என்றானென்க.

இனி, இருவினை கழுவும் நீரார்  எவ்வளவு இதனைக் கேட்பார்  அவ்வளவு அவருக்கு ஊற்றுச் செறித்து  உடன் உதிர்ப்பை  யாக்கும் என இயைத்துக் கூறினுமாம்.

காதி அகாதி என்ற இருவினைகளையும், ‘இருவினை’ என்றார், அழுக்கைப் போல அவற்றைப் பரிகரித்தலை யுடையாரை ‘இருவினை கழுவு நீரார்';  என்றார்.  அழுக்கை மலம் என்பர் வடநூலார்.  ஆன்மாவுடன்,  வினைகள் சேரவருவது,  ஊற்று சேரவருவதைத் தடுப்பது செறிப்பு, சேர்ந்துள்ளதை விலக்குவது (நீக்குவது) உதிர்ப்பு.

நம்மைச் சூழ்ந்துள்ள இவ்வுலகின்  எவ்விடங்களிலும் பல அணுக்கள்  சேர்ந்து,  ‘கார்மண வர்க்கணைகள்‘  என்ற பெயர் பெற்று  நிரம்பி யிருக்கின்றன  (மேரு-101),  அவைகள்  உயிர்களின்  மனம் வாக்கு உடல்  என்ற மூன்றினாலும் நிகழும் நிகழ்ச்சிகளை அனுசரித்து அதற்குத் தகுந்தவாறுஞானாவரணீயம் முதலிய பெயர்களைப் பெற்று அதற்குத் தகுந்த குணங்களையும் அடைந்து  அவ்வுயிர்களிடமே சேர  வருகின்றன; அங்ஙனம் சேரவரும் வினைவரும் வாயிலையே, ‘ஊற்று‘ என்பர்.

காய்ந்த  இரும்பினுள் புகும் நீரை யொத்து உயிரோடு வினைகள்  சேர்ந்து  கலப்பது,  ‘ஊற்று';  எனப்படும்.