‘ஜிநாகம விசாரத’, ஸ்ரீ வே. வேங்கடராஜூலு ரெட்டியார் எழுதியது

பழைய நூலுக்கு உரை எழுதுதல் அரிது.  சமயக் கொள்கைகள் நிறைந்த நூலுக்கு உரை எழுதுதல் அதனினும் அரிது.  உண்மைப் பாடங் கண்டறிதல், அரியப்ரயோகங்களுக்கு மேற்கோள் அறிதல். கூறப்பட்டுள்ள அரும்பொருளுக்கு விளக்கங் காணுதல் முதலியன எல்லாம்அருஞ்செயலாகும்.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணிக்கு முதலில் எழுதிய உரையில் சமயக் கொள்கைகள் மாறாயிருந்தன என்று கூறி அதனை ஜைன அறிஞர்கள் அங்கீகரித்திலர் என்றும், பின்னர் அவர் ஜைன சமயச் சான்றோர்பால் ஜைன சமயக் கொள்கைகளை நன்கு கற்று உரை யெழுதினாரென்றும் கர்ணபரம்பரைச் செய்தி வழங்குகிறது.

யசோதர காவியம் சிறிய நூலாயினும் சமயக் கொள்கைகள் பலவற்றை உட்கொண்டது; வடமொழி யசோதர சரிதத்தினை முதல்நூலாக வுடையது.  ஆகலின்,  இக்காப்பியத்திற்கு உரை யெழுதுதல் அருமையுடையதாகும்.

ஸ்ரீமான்.  பூர்ணசந்திர நயினாரவர்கள் யசோதர காவியத்திற்கு உரை யெழுத நேர்ந்ததன் காரணம் முன்னுரையினால் அறியலாகும்.  நயினாரவர்கள் சமயக் கொள்கைகளை நன்கு அறிந்தவர் ஆகலின்,  அவகள் உரையில் சமயக்கருத்துகள் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன.  அவர்கள் தமிழ்க் காவியத்தில் பொருள் விளங்காத இடங்களில், முதல்நூலை நோக்கி உண்மைப் பாடம் அறிந்து பொருள் எழுதியிருக்கிறார்கள்.  ஆதலின் இவ்வுரை.  நூலாசிரியர்கருத்துக்கு அமைவுடையதாகும்.  நயினார் அவர்கள் ஆற்றியுள்ள அரியபணியைப் பாராட்டி இவ்வுரையைத் தமிழுலகம் வரவேற்கு மென்று நம்புகின்றேன்.

வே. வேங்கடராஜூலு ரெட்டியார்