vii

சிவமயம்
திருவம்பலம் உடையார் துணை
முகவுரை
திருச்சிற்றம்பலம்

நலமார் கச்சி நிலவே கம்பம்
குலவா ஏத்தக் கலவா வினையே
திருச்சிற்றம்பலம்
தொண்டை மண்டலம்

‘தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ ‘தொண்டைப் பாலார் பதியார் அறத்தொடு சீரும் படைத்தவரே’ என்பவை முதலிய சான்றோருரைகளால் தொண்டைமண்டலச் சிறப்பு யாவராலும் நன்கறிந்ததே, இது பிற மண்டலங்களைப் போல மழைவளம் நிலவளம் முதலியவற்றை உடையது அன்று என்று சொல்வதும் உண்டு , இக் காஞ்சிப்புராணத்தையும் தணிகைப் புராணத்தையும் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்தையும் கற்றுணர்ந்தோர் அச்சொல்லைச் சிறிதும் மதியார். தொண்டைமண்டல சதகம் தொண்டை நாட்டார் மாட்சியை உணர்த்துகின்றது. நம் அருளாசிரியராகிய மாதவச் சிவஞான யோகிகள் நூலாய்பவர் திருநெல்வேலி நாட்டினர், என்றதற்குத் தலை சிறந்த காட்டாக விளங்கும் பெருமானார் ஆவார், ஆதலின், பெரிய புராணத்தை நன்கு ஆய்ந்துணர்ந்து, “திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்து ஐந்திணை வளமும் தெரித்துக் காட்ட, மருத்தொண்டை வாய்ச்சியர் சூழ் குன்றைநகர்க் குலக்கவியே வல்லான் அல்லால், கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார்?” என்று பாடியருளினார். அருளியும், ஓர் அரிய உண்மையை உலகர் தெரிய உணர்த்திய திறம் கவிஞர் எல்லார்க்கும் களிப்பூட்டுவதாகும். “வறுமை உற்றுழியும் தொண்டை வளமலி நாட்டோர் தங்கள் இறும் உடல் வருத்தியேனும் ஈவதற்கு ஒல்கார் அற்றே தெறுகதிர் கனற்றும் வேனிற் பருவத்தும் சீர்மை குன்றா, துறுமணல் அகடுகீண்டும் ஒண்புனல் உதவும் பாலி,” என்பதில், பாலாறு நீருதவும் திறத்தில் காலத்தினாற் செய்த நன்றியாதலையும் அதற்குத் தொண்டை மண்டலத்துச் சான்றோர் ஈகை ஒப்பாதலையும் உவமம் ஆக்கிய பெரிய சாதுரியம் யாவர்க்கும் மாதுரியமாகும் .

அன்னை காமக்கண்ணி கயிலாயத்திலிருந்து காஞ்சிக்கு வந்த உண்மையை உணர்த்தும் இடத்தில், ‘மங்கலத் தமிழ்ப்புவிக்கு வாள் முகம் எனத்தகும் துங்கமிக்க கீர்த்திபெற்ற தொண்டைநாட்டை நண்ணினாள்” என்று தொண்டை நாட்டைச் சிறப்பித்துப் பாடியருளினார்.

தமிழகம் நிலமகளது மதிமுகமாகும், தொண்டைநாடு அம்முகத்தில் உள்ள செங்கனிவாயாம் , காஞ்சிமா நகர் அத்திருவாயின்