xviii

.சிவமயம்

நன்றியுரை

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் மூவாயிரம் வெண்பொற்காசருளிய பரிசு, திருமந்திரம் மூவாயிரம் அருளுதலையும், திருஞானசம்பந்தர்க்கு ‘அம்பொன் ஆயிரம் கொடுப்பர்’ என்னும் அருளிப் பாட்டினையும் கொண்ட திருவுட்கிடைபோலும், அவர்தம் திருமுன்பு வணங்கி வாழ்தலே செயத் தக்கது.

தொண்டை மண்டலாதீனம், காஞ்சி நகரம்,திருக்கயிலாயபரம்பரை மெய்கண்டீசுவரர் மடாதிபர், மெய்கண்ட சிவாசாரியர் சந்தானம்,ஞானபீடம். சீலஸ்ரீ ஞானப்பிரகாசதேசிகபரமாசாரியகுருமகாசந்நிதானம்அவர்கள் வாழ்த்துரை அருளியும் முகவுரை முற்றுவித்தும்,‘ஆதீனசமயப்பிரசாரகர்’ என்னும் ஏற்றம் அளித்தும் உற்றுழி உதவியும்அருளும்அவர்தம்பேரருளை மறவாமையைஅவர்தம் திருவடி வணக்கத்தால் வேண்டுவல் அடியனேன். தமிழக முதலமைச்சர் கனம் எம்.பக்தவத்சல முதலியார் B.A.B.L., அவர்கள் உலகியல் அரசியலொடும் சிவமணம் கமழும் தமிழ் நூல்கள் பலவும் கற்று வல்லவராய் ‘மதிநுட்பம் நூலோடுடையர்’ என யாவரும் போற்றும் சிறப்பும் ஈன்ற புனிற்றாக் கன்றின்பாலுள்ள கனிவு பற்றிய பொருள் பொதிந்த திருப்பெயர்க்குப் பொருந்திய நடையும் உடையர் மதிப்புரை வழங்கியருளிய எளிவந்த வான்கருணையை என்றென்றும் போற்றும் கடப்பாடுடையேன்.

அருட்டிரு திருமுருக. கிருபானந்தவாரியார் சுவாமிகள், காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. க. வச்சிரவேல் முதலியார் (சித்தாந்த சிகாமணி, நாவலர்) B.A.,L.T. அவர்கள்,  காஞ்சி திரு.  S. அருணைவடிவேலு முதலியார் (மகாவித்துவான், தருமை ஆதீனத் தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர், காஞ்சிப்புராணக் குறிப்புரை எனப் பெயரிய சிறப்புரை ஆசிரியர்) இவ்வாசிரியன்மார்கள் தம் செவ்விய திருவுள்ளத்தில் எம் குடி வாழ்க்கையில் கருத்துடையவர்கள். அவர்கள் அருளிய அணிந்துரைகள் அடியேனை அந்நிலையில் நிறுத்தி வாழ்விக்கும் என்னும் துணிவுடையேனாய் வாழ்த்தி வணங்குகின்றேன்.

டாக்டர். திரு. மா. இராசமாணிக்கனார்,  M.A., M.O.L., PH.D. அவர்கள் முப்பதாண்டிற்கு மேலும் தொடர்புடையர் தம் பேரன்பால் தாமே அணிந்துரை வழங்கியும் திருத்தல விளக்கம் எழுதத் தூண்டியும் உபகரித்த கருணையை மறவேனாய்ப் போற்றுகின்றேன்.