xxviii

10. பத்துப்பத்துப் பத்தாந்திருப்பேர்-ஆயிரந் திருப்பெயர். 10?x10x10=1000. தவம் பத்தினிலொன்று பத்தாகச் செய்வார் என்றபடி: எனவே “ஏகம் பத்தார்” என்னும் பெயர்க்கு நயம் பெறப் பொருள் விரித்தபடி.

ஞானமும் ஞேயப் பொருளும் -- பற்றும்
               ஞாதாவும் இல்லையென் பார்க்கரி யாராம்
ஞானமும் ஞேயப் பொருளும் -- பற்றும்
               ஞாதாவு மாய்ப்பகுப் பார்க்குயெட்டாராம்  (ஆனந்தம்) 11

11. பரமுத்தி நிலையாகிய சிவபோக அநுபவ நிலையில் உயிரும், உயிரினறிவு நிகழ்ச்சியும் , முதற்பொருளும் உள்ளனவெனினும், யான் துய்க்கின்றேன் என்னும் சுட்டறிவு நிகழப் பெறாமையின் காண்பானும் காட்சியும் காட்சிப்பொருளில் வியாப்பியமாய் அடங்கி நிற்கும் என்பது உணர்த்துகின்றது, இது.

காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி காணார்கள் -காண்பானும் காட்டுவதுங் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன் வாட்டும்நெறி வாரா தவர் என்னும் வினாவெண்பாவின் பொருளை விளக்குதல் காண்க .

மெய்யில் அணிவதும் பாம்பு -- மலை
           வில்லினில் நாணாய் விசிப்பதும் பாம்பு
கையில் பிடிப்பதும் பாம்பு -- அவர்
          காட்டின நாடகம் காண்பதும் பாம்பு (ஆனந்தம்) 12

12. அவர்காட்டின நாடகம் காண்பதும் பாம்பு என்றது பதஞ்சலி முனிவரை.

நாதத் துடியி னடிப்பும் -- மெல்ல
          நடந்து நடந்து நடிக்கும் நடிப்பும்
வேதம் படிக்கும் படிப்பும் -- நுதல்
         மீது விளங்கு குறுவேர்ப் பொடிப்பும் (ஆனந்தம்) 13
 
கையிற் கபாலத் தழகும் -- திருக்
           காலினிற் பாதுகை சேர்ந்த அழகும்
மெய்யணி நீற்றின் அழகும் -- மையல்
          மீறுங் குறுநகை மூர லழகும் (ஆனந்தம்) 14
 
உடுப்பது காவி உடையாம் -- மறை
        ஓதிமம் தேடும் சிரமேற் சடையாம்
எடுப்பது பிச்சை அமுதாம் -- மார்பில்
       ஏற்பது காமாட்சி கொங்கைச் சுவடாம் (ஆனந்தம்) 15

15. முதல்வன் உயிர்களுக்குப் போகமும் யோகமும் உதவுதற் பொருட்டுப் போகவடிவும் யோக வடிவுமாய்த் தம்முள் மாறுபட்ட வடிவங்களைத் தான் ஒருவனே கோடலின், அந்நிலை உலகத்தின் வைத்து அறியப்படாத அதிசய நிலையாகலின் , அவன் அசிந்திதன் எனவும், அவன் உரு, உலகினை இறந்துநின்றதெனவும் உணர்க என உணர்த்தி யருளியபடி. திருச்சிற்றம்பலம்.