xxxi

திருஞானசம்பந்த நாயனார்
திருக்கச்சியேகம்பம்
பண் -- இந்தளம்.

திருச்சிற்றம்பலம்.

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.      1

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பமே யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.      2

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
சேராதா ரின்பமா யந்நெறி சேராரே.             3

குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.    4

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.         5

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தம்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.    6

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின் றஅலங் காரம்மே.           7

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்தலை மேலாரே.           8