பண்டு செய்த பழவினை யின்பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன் தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே. 1
நச்சி நாளும் நயந்தடி யார்தொழ இச்சை யாலுமை நங்கை வழிபடக் கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழில் கச்சி யேகம்ப மேகை தொழுமினே. 2
ஊனில் ஆவி இயங்கி உலகெலாம் தானு லாவிய தன்மைய ராகிலும் வானு லாவிய பாணி பிறங்கவெங் கானி லாடுவர் கச்சியே கம்பரே. 3
இமையா முக்கண்ணர் என்நெஞ்சத் துள்ளவர் தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர் இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன் நமையா ளும்மவ னைத்தொழு மின்களே. 4
மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும் பொருந்தி நின்றெனக் காயஎம் புண்ணியன் கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ இருந்த வன்கச்சி யேகம்பத் தெந்தையே. 5 |