23
  கருதுவன் றொண்டர் கடகச் சுவாதி
75 குருபூசை நாளிற் குறைவிலா திவர்க்கு
வருபூசை தந்தோர் மாநிலத் தோங்கித்
தவப்பய னெய்திச் சதுமறைக் கிரியிற்
சிவகதி யடைத றிண்ண முண்மையதே

திருநட்சத்திரம் முற்றிற்று



சைவசமய குரவர் முதலியோர் குருபூசைத் தினங்கள்
 
சிரித்தைச் சதய மப்பர் சிறந்தவை காசி மூல
மத்தரைப் பணிசம் பந்த ரானிமா மகத்தி லந்த
முத்தமிழ் வாத வூரர் முதியநல் லாடி தன்னிற்
சுத்தமாஞ் சோதி நாளிற் சுந்தரர் கயிலை சேர்ந்தார்.
பாடிய சம்பந்தர் வைகாசி மூலம் பயிலுமப்பர்
நீடிய சித்திரை மாதச் சதய நிறைவன்றொண்ட
ராடியிற் சோதி திருவாத வூரர்நல் லானிமகந்
தேடிய சேக்கிழார் வைகாசிப் பூசஞ் சிறந்தனரே.
 
சந்தான குரவர் குருபூசைத் தினங்கள்
 
சித்திரை யத்த முமாபதி யாவணித் திங்கடனி
லுத்திரஞ் சீர்கொண் மறைஞான சம்பந்த ரோதுகன்னி
சுத்தமெய்ப் பூர மருணந்தி யைப்பசிச் சோதிதனில்
வித்தக மெய்கண்ட தேவர் சிவகதி மேவினரே.
 
சைவசமய குரவர் நால்வர் வயது
 
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரருக்குச்
செப்பியநா லெட்டினிற் றெய்வீக - மிப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி.
 

"பெருமகிழ்ச்சி தானிறைந்த சித்திரையிற் சதயமாந் திருநாளில்“
என்று (திருநா - புரா - 428) அப்பா சுவாமிகளது திருநட்சத்திரத்தையும்,
“புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும் புகலி வேந்தர்“ என்று
(திருஞான - புரா - 1109) திருஞானசம்பந்த சுவாமிகளது வயதையும்
சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணத்துக் குறித்தருளினர்.


குறிப்பு :- மேடம் - தகர் - மை = சித்திரை. இடபம் - காளை -
விடை - சே = வைகாசி. கடகம் - குளிர் = ஆடி. கோளரி - சிங்கம் =
ஆவணி. கன்னி = புரட்டாசி. துலாம் = ஐப்பசி. தேள் = கார்த்திகை. வில்
- தனு = மார்கழி. மகரம் = தை. மீன் = பங்குனி. முன்னாள் = அசுவினி.
ஆரல் - அங்கி = கார்த்திகை. பார் = உரோகிணி. மான்றலை = மிருகசீரிடம்.
அரவு = ஆயிலியம். விளக்கு = சுவாதி. இந்திரனாள் = கேட்டை. குன்று =
சதயம்.