79

விளக்கியதோடு அவற்றையே தமது புராணத்திற்கு ஆதரவாகக் கொண்டனர்.
புராணமாகிய பெருமாளிகை அந்த அடிநிலையின்மேற் கட்டப்பட்டது
என்னின் அஃது அமையும். இவற்றையே இப்புராணத்தின் உறுப்புக்களாக
மேலேசுட்டப்பட்டதும் காண்க. இனி முன்னாளிற் கண்ட பழங்
கல்வெட்டுக்களும், அமைச்சர் பெருமானாகிய ஆசிரியர்அரசாங்கஞ்
செலுத்தலிற் கண்ட சாசன முதலியவையும், உலகவழக்கிற் கேட்ட
சரிதவரலாறுகள் முதலியவைகளும் ஆதரவாயின. இவை எல்லாவற்றிக்கும்
மேலாய் ஆசிரியர் அம்பலவர் திருவருள் வெளியிலே அத்து விதமாய் நின்று,
அருண்மயமான ஞானக்கண்ணிலே எல்லா உண்மைகளையும் அவனே
காட்டக் கண்டு, அறிந்தபடி பாடினர். இப்புராணம் முழுதும்
அருள்வாக்காகிய வேதம் என்பது முக்காலும் சத்தியமேயாம்.

செய்யுட்டொகையும் இடைச்செருகல்களும்

    இப்புராணச் செய்யுள் தொகை 4253 என்பது உமாபதியார்
புராணவரலாறு. இத்தொகைக்குமேல் 32 பாட்டுக்கள் அச்சிட்ட பிரதிகளிற்
காணப்படுகின்றன. அவை பிற்காலப் புலவர்களால் உண்டாக்கப்பட்டுப்
புராணத்திற் புகுத்தப்பெற்ற இடைச்செருகல்கள் என்று அறிஞர்
கருதுகின்றனர். செய்யுட்டொகையும் இடைச்செருகலையும் காட்டத்
தக்கதோர் பழைய சுவடியின்படம் உதாரணத்துக்காக இதில் சேர்த்துள்ளேன்.
இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சியும் சேக்கிழார் சுவாமிகளைப்பற்றியும்
புராணத்தைப் பற்றியும் உள்ள பற்பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களும்
எனது சேக்கிழார் என்ற நூலில் எழுதியுள்ளேன். இடன் நேர்ந்தவழிப் புராண
உரையினுள்ளும் அங்கங்கும் குறித்துள்ளேன். விரிவு ஆண்டாண்டுக்
கண்டுகொள்க.

தனித் தமிழ் நூல்

    இப்புராணம் உபமன்னிய பக்த விலாசம் என்ற வடமொழி நூலின்
மொழிபெயர்ப்பு என்போர் சிலர். இது முற்றிலும் தவறு. இது தனித்தமிழ்
நூலேயாம்.

பயன்

இப்புராணத்தின் பயனாவது இருள் போக்குதல் என்க. என்னை?
இருள் இருவகைப்படும்; புறவிருள் ஒன்று; சிந்தையுள் நின்ற அகவிருள்
மற்றொன்று; புறவிருள் போக்குபவன் செங்கதிரவன். அதுபோல்
உயிரினிடத்துப் பொருந்திய ஆணவம் என்னும் வலிய இருளைப்
போக்குவது இத்தொண்டர் புராணம் என ஆசிரியர் நூற்பெயர்
சொல்லியவிடத்தே அறிவுறுத்தியுள்ளார். உலகச் சார்புபற்றிக் கற்போருக்கும்
இப்புராணம் பெரும் உண்மைகளை அறிவுறுத்தி நற்பயன் அளிக்கும்.
இப்புராணம் ஒரு பெருங்காப்பியமாம். நாட்டின் அமைப்பும், அந்நாள்
வழக்குக்களும், சரிதமும், பிறவும் அறிதற்கு இது பெருந்துணையாம்.
ஆணவ நீங்கி அரனடி நினைந்து பேரின்ப முறும் ஆசைபற்றிக்
கற்போருக்கு இது பெருஞ் சேமநிதியாம். இது பேரின்ப வீட்டிற்குச்
சாதனமாவதன்றி இதுவே சாத்தியமெனப்படும். அடையப்படு பொருளுமாம்
என்பதும் அறிஞர் துணிபு. ஆசிரியர் இப்புராணம் பாடி அரங்கேற்றிய
பின்னர், இப்புராணச் சரிதங்களை யுணர்ந்து கொண்டு இவ்வுலகத்துத் தமது
எஞ்சிய வாழ்நாளைச் செலுத்தி அரனடி யடைந்தனர் என அறிகின்றோ
மன்றோ? கலைஞானங்களை யறிதற்கும் இது பெருந்துணையாம்.

பல பக்குவ முடையார்க்கும் பயன் படும் சிறப்பு

உலகத்து எவ்வெப் பக்குவமுடையார்க்கும் இப்புராணம் வழிகாட்டும்
திருவிளக்காம் என்பது இதனுட் பேசப்படும் சிவப்பேறடைந்தோர்
சரிதங்களான் அறியக்கிடக்கும். இதனுள்ளே மரபுவகையானே திருமறையோர்
சரிதம் பதின்மூன்றும், சிவவேதியர் சரிதங்கள் நான்குமாம்; மாமாத்திரர்
ஒருவர், முடிமன்னர் அறுவர், குறுநில மன்னர் ஐவர், வணிகர் ஐவர்,
வேளாளர் பதின்மூவர், சாலியர் இருவர், குயவர் - தைல விளையாளர் -
பரதவர் - சான்றோர் - வண்ணார் - மறவர் - நீசர் - பரணர் இவர்
ஒவ்வொருவர், மரபு குறித்து உரையா