109

நாயன்மார் (4 - 470 - 534) - தலைவர்கள். தலைமைபற்றிச்
சிவபெருமானது பெயர். அவரது பேரடியார்களான அறுபத்துமூவர்
முதலியோர்க்கும் வழங்கும்.

நாவலூர் (148 - 224 - 309 - 332) - இது நாட்டுத் தலங்களுளொன்று.
திருநாமநல்லூர் என்று வழங்கப்பெறும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதரித்த
தலம். சடையனார், இசைஞானியார், நரசிங்க முனையரையர் முத்திபெற்ற
தலம். தலவிசேடங் காண்க. (பக் - 258).

நான்முகன் (17) - அயன் (126 - 243) திசைமுகன் (137)
- நான்முகன்
(287) - பிரமதேவன். சிவனாணையின் வழியே
படைத்தற்றொழில் செய்யும் தேவர். இவர் முகங்களைந்தில் ஒன்றினைச்
சிவபிரான் கிள்ளிவிட்டதினால் நான்முக முடையாராயினார். வேதங்களைச்
சிவபிரானால் உபதேசிக்கப் பெற்றுத் தேவர் முனிவர்களுக்கு உபதேசிக்கும்
போதகாசிரியர். திருமாலின் உந்திச் சுழியினின்றும் தோன்றியவர்.
மும்மூர்த்திகளுளொருவர். அன்னவூர்தி யுடையார். இவர் பொன்னிறத்தராய்த்
தாடி, மீசை, நான்கு முகம், கைகளில் செபமாலை - தண்டாயுதம் - ஸ்ருக் -
ஸ்ருவம் - கமண்டலம் உடையவர்; சரசுவதி - சாவித்திரி காயத்திரி
என்பவர்கள் இவரது தேவியர். பல சரிதங்கள் இவரைப்பற்றி நிகழ்வன.
புராணங்கள் பார்க்க. பதினெண் புராணங்களுட் பிராமம், பதுமம் என்னு
மிரண்டும் இவரைப் பற்றியன.

நீதிவழக்குக் கலைப் பெயர்கள் - ஆட்சி - ஆவணம் - காட்சி
- மூலவோலை - படியோலை - மாட்சி - (201 - 202) ஆளோலை (185) -
கரணத்தான் (204) - சபையோர் (204) - வழக்கு (390) - (இவை
இப்பகுதியிற் காணப்பட்டன).

நீர்நாடு (67) - சோழ வளநாடு.

பதிகம் (48) - புராண உறுப்புக்களில் ஒன்று. புராணப் பொருளைச்
சுருக்கி முகப்பிற் கூறுவது. இப்புராணத்திற்குப் பதிகம் திருத்தொண்டத்
தொகை.

பதியிலார் (குலம்) (90 - 278) - உருத்திர கணிகைமார் (278) -
உருத்திர கணிகையார் மரபு.

பரசிராமன் (491) - பிருகு வம்சத்தில் வந்த சமதக்கினி முனிவருக்கு
இரே ணுகையிடம் பிறந்த குமாரர். இவர் விட்டுணுவின் அமிசாவதாரம்.
இவர், தம் தந்தையைக் கொன்ற கார்த்தவீரியன் வழிவரும் க்ஷத்திரியர்களை
நாசம் செய்யும் பொருட்டுச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து பரசு
ஆயுதம் பெற்றவர். அவ்வாறு கொன்ற பாவம் நீங்கும் பொருட்டுத்
தென்றிசையில் ஒரு நாடு கண்டு, அந்நாட்டை வேதியர்க்கீந்தனர். அந்நாடே
மலையாள நாடாகும். காஞ்சிப்புராணமும் பிறவும் காண்க.

பரவையார் - (90 - 278 - 288 - 294 - 296 - 315 - 325 - 326
- 327 - 328) நங்கை பரவையார் (293 - 309) - கயிலையில் உமாதேவியா
ரிருசேடியருட் கமலினி யென்பவர் பரவையாராகத் திருவாரூரில்
திருவவதாரஞ் செய்தார். பதியிலார் குலமாகிய உருத்திர கணிகையர்
குலத்திலுற்பவித்தவர். சிவபெருமான் ஆணையால் சுந்தரமூர்த்தி
சுவாமிகளைத் திருமணம் செய்துகொண்டவர். கண்ணுதலைத் தொழுமன்பே
கைக்கொண்டவர். "நங்கை பரவை" என்று இராசராசேச்சரத்திற் செப்புப்
படிமத்தில் இவர் பெயர் காணப்பெறும். வீதிவிடங்கப் பெருமான்
திருவோலக்கத்திற் பாடலாடல்களுக் குரியவர். இறைவன் ஓரிரவில்
இருமுறை தூது நடந்த இவரது திருமாளிகை யிருந்த இடத்தில் இப்போது
இவரது கோயில் உள்ளது. தடுத்தாட்கொண்ட புராணச் சுருக்கத்தும் (பக் -
424), ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தும், கழறிற்றறிவார்
புராணத்தும், வெள்ளானைச் சருக்கத்தும் இவர் சரிதங் காண்க.

பழையாறை (502) ஆறை (501) - இது சோழநாட்டுத்
தலங்களுளொன்று. அமர்நீதி நாயனார் அவதரித்த தலம்.
தலவிசேடங் காண்க. (பக் - 688).

பனிவரை (11 - 51) - இமயம் (74) - இமயமலை. பனியால்
மூடப்பட்டது.