110

பாற்கடல் (25 - 138) - பெருஞ் சமுத்திரங்கள் ஏழனுளொன்று.
திருமால் பள்ளி கொண்டுள்ளது. தேவாசுரர்கள் அமிர்தம் பெறக்
கடைந்தபோது இதனின் றெழுந்த விடத்தைச் சிவபெருமான் உண்டு
கண்டத்தில் நிறுத்தி உலகைக் காத்தனர். உபமன்னிய முனிவர் பாலுக்கு
அழுதபோது சிபெருமான் இக்கடலினை வரவழைத்து அவருக்கு
உண்ணும்படி அளித்தனர். அமுதசொரூபமானது. இதனைக் கடைந்தெடுத்த
அமுதத்தைத் தேவர்கள் உண்டுநீண்ட வாழ்நாள் பெற்ற அமரராயினர்.

பிரணவம் - வேதமூலம் (43) - எல்லா மந்திரங்களுக்கும் முதலாயது.
மறைகட்குப் பிறப்பிடமாவது. சமட்டி - வியட்டி என இருவகைப்படும்.
இதனால் அறிவிக்கப்படும் பொருளாய் - இதற்கு வாச்சியனாய் - உள்ளவர்
சிவபெருமான். இதன் வடிவமாயுள்ளவர் விநாயகக் கடவுள். இதனுள்
விளங்குபவர் ஆனந்தக் கூத்தராகிய நடேசப்பெருமான். கொன்றைமலர்
இதன் வடிவமா யமைந்ததாதலின் அது சிவபெருமானுக்குத் திருவடையாள
மாலையாயமைந்த தென்பம்.

பிள்ளையாம் (258) - திருஞானசம்பந்த சுவாமிகள். ஆளுடைய
பிள்ளையார் உலகத் தாய் தந்தையரால் பிள்ளையாகக் கொண்டு
பாலூட்டப் பெற்றமையால் இப்பெயர் பெற்றார். இவர் வரலாறு இவரது
புராணத்துட் காண்க.

 பிள்ளைப் பருவங்கள் - பருவம்(279) - காப்பு (279) -
தளர்நடைப் பருவம், பிள்ளைமைப் பருவம் (282) பேதைமைப் பருவம் (282)
- கழங்கு பத்து - அம்மனை. ஊசல் (281) - காப்பு - செங்கீரை - தால் -
சப்பாணி - முத்தம் - வாரானை - அம்புலி - சிறுபறை - சிற்றில் - சிறுதேர்
- என்பனவாக வகுத்துப்பிள்ளைக்கவிப் பிரபந்தம் பாடுதல் மரபு. பெண்பாற்
பிள்ளைக்கவியில் மேற்கூறியவற்றில் கடைமூன் றொழித்துக் கழங்கு -
அம்மனை - ஊசல் - என்பவற்றைக் கூட்டிப் பாடுதல் மரபு. "கருந்தடங்
கண்ணார் கழல்பந் தம்மானைப் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே" -
என்பது ஆளுடையபிள்ளையார் தேவாரம். (பக்கங்கள் - 340 - 341 -
பார்க்க.) (தளர்நடை - ஒருவகைப்பருவம் போலும்).

புகலூர் - சோழநாட்டுத் தலங்களுளொன்று அப்பமூர்த்திகள்
திருவடியடைந்த தலம். நம்பியாரூரர் செங்கல் செம்பொன்னாகப் பெற்ற
தலம். சரண்யபுரம் என்று வடமொழியில் கூறுப. தலவிசேடங் காண்க. (பக்-
314).

புகார் (403 - 404 - 408) - காவிரிப்பூம்பட்டினம்.

புத்தூர் (153) - மணம் வந்த புத்தூர் (169) - சடங்கவி
சிவாசாரியாரது ஊர். "மணம் வந்த புத்தூர்" எனப் பன்னாள் வழங்கியது.
இப்போது மணம் தவிர்ந்த புத்தூர் என வழங்கப் பெறுகின்றது. இது
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முதலிற் குறித்திருந்த திருமணம் தவிர்ந்ததைக்
குறிப்பதாகும். நம்பியாரூராது ஒரு மணத்தைச் சிதைவு செய்து
வல்வழக்கிட்டு இறைவன் தடுத்தாட் கொண்டருளிய தலம்.

புலீச்சரம் (396) - இது சிதம்பரத்திலுள்ளதோர் சிவாலயம்.
வியாக்கிரபாதரால் பூசிக்கப்பெற்றது. திருநீலகண்டக் குயவனாருக்கு
அனுக்கிரகித்த திருத்தலம். இளமையாக்கினார் கோயில் என்ப.
தலவிசேடங் காண்க. (482).

புற்றிடங்கொண்டவர் (101 - 136) - புற்றிடங் கொண்ட
புராதனர் (271) - திருவாரூர்த் திருமூலத்தானத்தே புற்றினை
இடமாகக்கொண்டு எழுந்தருளி யிருக்கும் இறைவர். வடமொழியில்
வன்மீகநாதர் என்பர். வன்மீகம் புற்று.

புனல் நாடு - சோழ நாடு.

புன்கூர் (261) - இது சோழநாட்டுத்தலம். திருநாளைப்போவார்,
ஏயர்கோன், கலிக்காம நாயனார் தொண்டாற்றிய தலம்.
தலவிசேடங் காண்க (ப. 312).

பூங்கோயில் (134 - 135) - பூங்கோயில் மேயபிரான் (271) -
திருவாரூரிலுள்ள சிவாலயத்திற்குப் பெயர்.