112

தேர், இருள் யானை; கடல் முரசம்; குயில் எக்காளம்; சந்திரன் குடை;
மாலையும் இரவும் இவன் ஆட்சிக்காலம். தட்சிணாமூர்த்தியா யெழுந்தருளி
யிருந்த சிவபெருமான் மீது தேவர்களால் குமார சம்பவத்தின் பொருட்டுத்
தனித்து ஏவப் பட்டு மலரம்பு சொரிந்தான். இறைவன் நெற்றிக் கண்ணால்
பார்த்ததும் சாம்பராயினான். இவனது தேவி இரதி வேண்டலும், இறைவன்
பார்வதியம்மையைத் திருமணம் செய்த காலத்துத் திருவருளால் உயிர்ப்பெற்
றெழுந்தான். இரதிக்கு மாத்திரம் உருவுடையவனாய், உலகருக்கு
அநங்கனாய் விளங்குபவன்.

மாவலி (236) - சிவபெருமானிடம் பெருவரம் பெற்றுப் பெருவலி
பெற்ற பேரரசன். இவன்பால் திருமால் வாமனனாய் மூவடி மண்ணிரந்து,
பெற்று, இவனைப் பாதலத்தழுத்தி, அப்பழி தீரத் திருமாணிகுழியிற்
சிவனைப் பூசித்தனர். இச்சரிதம் சிவஞானசித்தியார் என்ற ஞானசாத்திரத்தில்
"தானமென் றிரந்து செல்ல" என்ற பாட்டில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
முன்பிறவியில் எலியாயிருந்து, திருக்கோயிலிலிருந்த விளக்குநெய்யை
யுண்ணும்போது, மூக்குச் சுட்டிடக், கனன்று, அபுத்தி பூர்வமாய்த் திரியைத்
தூண்டிய சிவபுண்ணியங் காரணமாக இறைவனருளால் மூவுலகாளும் பேரரசு
பெற்றவன். இச்சரிதம் "நிறைமறைக் காடு தன்னி னீண்டெரி தீபந் தன்னைக்,
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட, நிறைகடன்
மண்ணும் விண்ணும் நீண்ட வானுலக மெல்லாங், குறைவறக் கொடுப்பர்
போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே" என்று அப்பர் சுவாமிகளாற்
பாராட்டப்பெற்றது.

மாறர் - மாறன் (439) - மாறனார் (440) - இளையான் குடிமாற
நாயனார் புராணங் காண்க.

முருகன் (290) - குமாரக்கடவுள். என்றும் இளமையும் அழகு
முடையவர், சிவபெருமானது இளைய சேய். இவரது வரலாறு கந்த
புராணத்துட் காண்க.

முனைப்பாடி (147) - முனையரையர் என்ற பேருடைய சிற்றரச
மரபினரால் ஆளப்பெற்ற நாடு. "நரசிங்க முனையரென்னும் நாடுவாழரசர்"
என்னுமாட்சி காண்க. தற்காலம் ஏறக்குறைய தென்னாறுகாடு சில்லா
இந்நாட்டின் பரப்பாகும்.

மூலட்டானம் (270) - திருவாரூர்ப் புற்றிடங் கொண்டார்
எழுந்தருளியிருக்கும் இம். திருவாரூர்த் திருமூலட்டான மெனப்படும்.
தில்லையிற் பொன்னம் பலத்தின் வடபுறம் மூலஇலிங்கமூர்த்தி எழுந்தருளி
யிருக்குமிடமும் இவ்வாறே பெயர் பெறும்.

மெய்ப்பொருணாயனார் (467 - 472) - அறுபான்
மும்மைத்தனியடியாரு ளொருவர். சிவவேடத்தையே சிந்தை செய்யு
மியல்பினர். ஆகமப்பிரியர். இராசராசதேவர் இந்நாயனாரது செப்புப்
படிமத்தில் "தத்தா! நமரே காண் என்ற மெய்ப்பொருணாயனார்" எனப்
பொறித்துள்ளார். "இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரானன்பரென்றே
நன்னெறி காத்தவர்." சரிதங் காண்க. (பக் - 608).

மேருச்சிலை (496 - 498) - மகாமேருமலையையே சிவபெருமான்
திரிபுரதகனத்தில் வில்லாகக் கொண்டனர் என்ப.

யாதவன் (24) - துவரைக்கிறை (24) - யதுமரபிற் பிறந்தவன்
கண்ணன். துவாரகைக்கு அரசன். உபமன்னிய மாமுனிவராற் சிவதீக்கை
செய்யப் பெற்றவன். "ஓதிய வாசுதேவர்" என்ற பாட்டில் இச்செய்தியை
ஞானசாத்திரமாகிய சிவஞான சித்தியாரில் எடுத்துக்காட்டியிருத்தல் காண்க.

யோகம் - சைவபாதங்கள் நான்கனுள் ஒன்று. "முக்கு ணம்புல
னைந்துட னடக்கி மூல வாயுவை யெழுப்பிரு வழியைச், சிக்கெ னும்படி
யடைத்தொரு வழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்த்,
தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந் தன்மை கண்டரு டரும்பெரு
வெளிக்கே, புக்கழுந்தின ரெமதுருப்பெறுவார்; புவியில் வேட்டுவ
னெடுத்தமென் புழுப்போல்" - திருவாதவூரார் புராணம். இதனைத்
தோழமார்க்கம் என்ப.