113

வகை (49) - தொகை நூலை வகைப்படுத்திக் கூறுவது. வகைநூல்
என்பர்.

வாளிழல் (9) - ஆகாயவாணி. இறைவனது அருளிப்பாடாகிய
கேட்கப்படும் நிலையினை மேற்கொண்ட திருமேனி.

விஞ்சையர் (14 - 290) - ஒருவகைத் தேவச் சாதியார்.
கானம் வல்லவர்.

வியாக்கிரபாதர் - புலிக்காலன் - (41) - தில்லையில் திருநடனம்
காணும் முனிவருளொருவர். மத்தியந்தன முனிவர் புத்திரர். இவர் சிவபூசை
கடைப்பிடித்துச் சிவபெருமானை நேரிற் றரிசித்து வந்தவர். சிவபூசைக்கும்
பழுதில்லா மலர் எடுக்க நகங்களிற் கண்களும், மரம் வழுக்காமல் ஏறப்
புலிக்காலும் கையும் பெற்றவர். வசிட்டரது உடன் பிறந்தவளை மணந்து
உபமன்னியு முனிவரை ஈன்றவர்.

விறன்மீண்ட நாயனார் (494 - 500 - 501) - அறுபத்துமூன்று
தனியடியாரிலொருவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தவர். வேளாளர்;
செங்கண்ணூர் க்ஷேத்திர மான்மியம் என்னும் மலையாள நூலின்
முகவுரையில் "நாயர்" என்று கூறப்பெறுகின்றனர். நாயனார் என்பதனை
மலையாளர் நாயர் என மருவி வழங்கினர்போலும். "நாயனை யடியா
னேவுங் காரியம்" - "நாயனு மடிமை நாட்டியதாகும்" என்ற வழக்குக்களும்
காண்க. திருவேடத்தினில் உண்மை யன்புடையாராய்ப் பத்தி செய்பவர்.
திருத் தொண்டர்தொகையால் உலகு விளங்கவரும் பேறு தனக்குக் காரணர்.
"தியாகேசரும் புறகு" என்று கூறும் திண்மையுடையார். சரிதச் சுருக்கங்
காண்க (பக் - 631).

 விட்டுணுமூர்த்தி - நெடியோன் (18) - மால் (20 - 54 - 126 - 137)
- மாதவன் (24). அரி (73) - வாமனன் (236) - செங்கண்வன் (236) -
மும்மூர்த்திகளு ளொருவர். திதிக்கடவுளென்பர். நீலவர்ணமுடையராய்,
சங்கு சக்கர கதா கோதண்ட நாந்தக தாரியாய், இலக்குமி சமேதராய்த்
திருப்பாற்கடற் பள்ளியுடையராய் வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பர்.
சிஷ்டர்களின் அநுக்கிரகத்தின் பொருட்டும், துஷ்டர்களின் நிக்கிரகத்தின்
பொருட்டும் பத்துப் பிறவி யெடுத்தவர். கருடனை யூர்தியாக வுடையவர்.
சிவபெருமானைத் திரிபுர தகன காலத்து இடபமாய்த் தாங்கியவர்.
வராகமாய் நிலந்தோண்டிச் சிவனாரது திருவடிகளைக் காண முயன்றவர்.
அயக்கிரீவனைக் கொன்றபின் சரர்ங்கம் என்னும் வில்லின்மீது சார்ந்து
உறங்குகையில் அவ்வில்லின் நாணற்றுத் தலையிழந்தமையால், இலக்குமி
திருவாரூரில் இறைவனைப் பூசித்து மங்களம் பெற்றதன் பயனாக மீண்டு
மெழுந்தவர். மாவலிபால் மண்ணிரந்த சரிதம் முன்னர்க் கூறப்பட்டது.
கிருட்டிணாவதாரத்தில் சிவதீக்கை பெற்றுச் சிவபூசை செய்தவர்.
இராமாவதாரத்தில் இராவணன் சேனையைக் கொன்ற பழிபோக
இராமேசுவரத்தில் இலிங்கந் தாபித்துப் பூசித்தவர். சிவபெருமான்
சலந்தராசுரனைக் கொன்ற சக்கரத்தை வேண்டித் தினமாயிரந்தாமரைகளாற்
சிவபூசை செய்து, ஓர் நாள் பூவொன்று குறையத், தன் கண்ணொன்றிடந்து
அர்ச்சிக்கப், பெருமான் வெளிப்பட, அவரிடம் சக்கரமும் அதைத் தாங்கச்
சக்தியும் பெற்ற பேராளர். இதனை "நீற்றினை நிறையப் பூசி" என்ற
திருவீழிமிழலைத் திருநேரிசையிற் பாராட்டி யருளினர் அப்பர் சுவாமிகள்.
எஞ்சிய பகுதிகள் அந்தந்தத் தொகுதிகளிலுள்ளவற்றைத் திரட்டி
எழுதப்பெறும்.)

வீதிவிடங்கப் பெருமான் (130 - 275) - திருவாரூர்த் தியாகேசப்
பெருமான். உளிட்டாமல் இயன்ற திருவுடையராயும் திருவீதியுல் வருவராயு
முள்ளவர்.