- Vii -

முகவுரை

நீல மாமிடற்
றால வாயிலான்
பால தாயினார்
ஞால மாள்வரே.

ஒருமருந் தாகி யுள்ளா யும்பரே டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும்
அருமருந் தால வாயி லப்பனே யருள்செ யாயே.

வாயானை மனத்தானை மனத்து ணின்ற
      கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தவமாய யேற்றான் றன்னைச்
      சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
      தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
      சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே. - தேவாரம்

திருவிளையாடற் புராணம் என்பது மதுரையம்பதியிலே கோயில்
கொண்டிருக்கும் முழுமுதலாகிய சோமசுந்தரக்கடவுள் உயிர்க ளெல்லாம்
உய்திகூடுதற் பொருட்டுப் பெருங் கருணையினால் நிகழ்த்தி யருளிய
திருவிளையாட்டுக்களை உணர்த்தும் தமிழ் நூலாகும். மதுரைப் பதியானது
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பாகிய தமிழகத்திலே, செந்தமிழ்
நாடென்று சிறப்பித் தோதப்பெறும் பாண்டி நாட்டில், படைப்புக் காலந்
தொடங்கி மேன்மையுற்று வந்த பாண்டி மன்னர்கள் அரசிருக்கும்
தலைநகராயது; திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளையும் தம்முளொருவராகக்
கொண்டெண்ணும் பெருமைவாய்ந்த நல்லிசைப் புலவர் பல்லோர்
பன்னெடுங்காலம் சங்கமமர்ந்து அமிழ்தினு மினிய தமிழமொழியை
ஆராய்ச்சி செய்தற்கு நிலைக்களமானது; சங்கப் புலவர்கள் பாடித்தொகுத்த
எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரி பாடல் எழுபது செய்யுட்களுள் வையைக்
கென்றும் தனக் கென்றும் முப்பது செய்யுட்களை வரைந்து கொண்டது;
மற்றும் எண்ணிறந்த சான்றோர்களாற் பாரட்டப் பெற்றது; தேவாரப்
பாடல்பெற்ற

‘கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர்
ஏடகம் நெல்வேலி இராமேசம் - ஆடானை
தென்பரங்குன் றம்சுழியல் தென்றிருப்புத் தூர்காளை
வன்கொடுங்குன் றம்பூ வணம்’

என்னும் பாண்டிநாட்டுப் பதினான்கு திருப்பதிகளில் முதலாயது; திருஞான
சம்பந்தப் பிள்ளையார் பாடிய 1. நீலமாமிடற்று, 2. மந்திரமாவது, 3.
மானினேர்வழி, 4. காட்டுமாவது, 5. செய்யனே, 6. வீடலாலவாயிலாய்,