இதன்கண் எழுதப்பட்டிருக்கும் உரை முன்
உரைகளைவிட
விளக்கமுடையது. இன்றியமையாத பாடபேதங்கள் காட்டப் பெற்றிருக்கின்றன.
பல இடங்களில் முன் உரையாசிரியர்கள் கொண்ட பொருளைவிடச் சிறந்த
பொருள் காட்டப் பெற்றிருக்கின்றது. இதனை அவ்வுரைகளோடு ஒப்பிட்டுப்
பார்ப்பவர்களுக்கு அஃது இனிது விளங்கும். இதன்கண் பிள்ளையார்,
சிவபெருமான், முருகன், மதுரைநகர் முதலிய திருவுருவப் படங்களும்,
ஒவ்வொரு திருவிளையாடலின் கருத்தைக் கண்ட வுடனே விளக்குவதற்கு
ஒவ்வொரு அரிய படமும் மிக்க அழகியவாக எழுதுவித்துச்
சேர்த்திருக்கின்றோம்.
இதற்கு உரை எழுதி வருகின்ற
இலக்கணப் புலமையும் இலக்கியப்
புலமையும், சமயநூற் புலமையும் ஒருங்கே வாய்ந்த வரும், அன்பு
அறிவொழுக்கங்களிற் சிறந்தவரும், எளிய இனிய செந்தமிழ் உரைநடை
எழுதும் வன்மை யுடையவருமான திருவாளர் பண்டித ந. மு. வேங்கடசாமி
நாட்டாரவர்களும், அவர்கட்கு உதவியாக விருந்து எழுதிவரும் திருவாளர்
அ. மு. சரவண முதலியாரவர்களும், இதனைப் பதித்து வருகையில் எழுத்துப்
பிழைகள் முதலியவற்றைப் பார்த்துதவிவரும், தமிழாசிரியராய திருவாளர்
மா. வடிவேலு முதலியாரவர்களும், பிள்ளையார் படம், சிவபெருமான் படம்,
திருவிளையாடற் படங்கள் முதலியவற்றை மிக்க திறமையோடு எழுதி
யுதவிவரும் திருவாளர் ஆ. செகனாதாச்சாரியாரவர்களும் நெடிது வாழ்ந்து
எல்லாப் பயன்களையும் அடையுமாறு எல்லாம் வல்ல முழுமுதற் செம்பொருளை
வழுத்துகின்றோம்.
|