‘கொல்லும் வலியினையுடைய பேய் வயிறார உண்ணப் பரந்தவலி யுடையான் களவேள்வி வேட்டது’ என்பது அதன்உரை ; “நெற்க திரைக்கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட்பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல, அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற்குவித்துக் களிறு எருதாக வாண்மடலோச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச் சேற்றொடு உதிரப்பேருலைக்கண் ஏற்றி ஈனா வேண்மாள் இடந்துழந்துஅட்ட கூழைப் பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்” (தொல். புறத். சூ. 21, உரை)
என நச்சினார்க்கினியர் இத்துறையை விரித்துக் கூறுவர்.
இங்ஙனம் களவேள்வியிற் கூழுண்ட கூளிகள் மனமகிழ்ச்சியால் குரவையாடுதல்
மரபு ; அச்செயல் 1பின்றேர்க்குரவை யென்னும் துறையுள் அடங்கும
“ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும்” (புறத்திணை. சூ . 21) என்ற தொல்காப்பியச் சூத்திரப்பகுதிக்கு, ‘தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின்பின்னே கூழண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடுங்குரவை’ என நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் இது புலப்படும். அங்ஙனம் குரவையாடும் கூளிகள் வெற்றிபெற்ற தலைவனைப்புகழும் ; அச்செயல் மாணார்ச்சுட்டிய வாண்மங்கலம் என்னும் துறையின் பாற்பாடும் ; “பகைவரைக்குறித்த வாள்வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச் சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலம்..... இது பரணியிற் பயின்றுவரும்” (தொல். புறத். சூ. 36, உரை) என்ற நச்சினார்க்கினியர் உரையும், “ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாம் செங்குருதி நீராடி யுண்டு நிணம்” என்ற மேற்கோட்செய்யுளும் அத்துறையை விளக்கும். 1. முன்றேர்க்குரவையென்பர் புறப்பொருள் வெண்பாமாலையுடை யார். |