இந்நூலுள் அவர் அம்மவைக்குப் புதல்வராக அவதரித்தமை, 220-21-ஆம் தாழிசைகளிலும், அவருக்குரிய பொம்மபுரம் முதலியன காப்பிலும், 16-7, 300, 736-ஆம் தாழிசைகளிலும், அவர் வீரசைவமத ஆசிரியரென்பது 737-ஆம் தாழிசையிலும் சொல்லப்பட்டுள்ளன. சிவஞானபாலைய தேசிகரெனவும் அவர் வழங்கப்பெறுவர் ; அவர்மீது துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் பாடிய தாலாட்டு, நெஞ்சுவிடுதூது, பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி, கலம்பகம் ஆகிய பிரபந்தங்கள் உண்டு. இந்நூலில் கடவுள்வாழ்த்தில் நிட்களசிவம், சகளசிவம் திருமால், பிரமதேவர், விநாயகர், முருகக்கடவுள், சூரியனென்பவர்கள் வாழ்த்தப்படுகின்றனர். கடைதிறப்பில், பலவகையான ஞானபக்குவிகள் மகளிராகச் சொல்லப்படுகின்றார்கள். ஏனைப் பரணிநூல்களில் பல நாட்டு மகளிரைக் கடைதிறக்கும்படி கூறும் மரபைத்தழுவி இப்பகுதியில் சிலநாட்டின் பெயர்கள் தொனிக்கும்படி ஆசிரியர் அமைத்திருக்கின்றனர் ; அங்கம், வங்கம், கொல்லம், சிந்து, சோனகம், சாவகம், கன்னடமென்னும் நாட்டின்பெயர்கள் அவ்வகையில் அமைந்துள்ளன. மகளிர் இயல்புக்கும் ஞான அநுபவிகள் இயல்புக்கும் ஒப்புமை அமையும்படி சிலேடையாகச் சில தாழிசைகள் இப்பகுதியில் உள்ளன. காடுபாடியதில், அஞ்ஞானிகள் வாழும் இடமே சுடுகாடாகவும், அவர்களே விலங்குகளாகவும், கோபம் முதலியன முள் முதலியனவாகவும் சொல்லப்படுகின்றன. பேய்களைப்பாடியதில், அறிவற்றவர்கள் பேய்களாகச் சொல்லப்படுகின்றனர். பலவகைச் சமயக்கொள்கைகள் இதிற் காணப்படும். உலகத்தில் உள்ள பலவகை வஞ்சகச்செயல்களை மிக அழகாக ஆசிரியர் இதில் அமைத்திருக்கின்றனர். கோயிலைப்பாடியதில், தேவியின் கோயிலுள்ள சோலை, திருக்கோயில் முதலியவற்றின் பெருமை காணப்படும். தேவியைப்பாடியதில், தேவியின் பெருமையும் அவள்பரிசனத்தின் இயல்பும் காணப்படுகின்றன. ஞானநிலையை உடையவர்களே |