நளவெண்பா
என்றார். இதில் முதற்கண் படையையே
படைத்துக்காட்டியது, அதன் இன்றியமையாமை நோக்கி.
என்னை? நாட்டில் நன் முறையை நிறுத்துதற்குத் துணையாக
அமைவன, அன்பும் அச்சமுமாம். உலகில் மக்கள்
எவரும் பணியாற்றுவது, அன்பு அல்லது அச்சத்தாலன்றி
வேறொன்றான் ஆகா. ஒரு தொழிலாளி, ஒரு பணிநிலையத்தில்
நன்கு பணியாற்றுகின்றா னென்றால் தன் குடி உயர்தல்வேண்டும்,
அதனால் தன் மனைவி மக்கள் தான் நன்கு வாழ்தல்வேண்டுமென்ற
அன்பு உந்துதல் ஒருபாலும், யாம் இத்தொழிலைச் செம்மைபெற
ஆற்றாவிட்டால் இந்நிலைய முதல்வர் நம்மைக்கடிவர்,
வேலையினின்றும் நீக்குவ ரென்ற அச்சம் ஒருபாலும்
அலைத்தாலேயே என்பதை நாம் அறிகின்றோமன்றோ?
இதனானே நாவுக்கரசரும் தம் நெஞ்சுக்கு இறைவனை வழிபடுமாறு
அறிவுறுத்துங்கால்,
‘அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சே நீநினை நின்றி ஊரினை’
என்று, நாம் இறைவனை நினைக்காவிடின்
பல்வகைத் துன்பங்கள் வந்து வருத்துமே, பிறவிப்பிணி
முதலியனவிடாவே, என, அவைகட்கு அஞ்சியாவது, அன்றி
மக்களாய்ப் பிறந்த நாம், இறைவனுக்கு அன்பு பூண்டொழுகுவது
கடமையாயிற்றே, எம் இறைவனைத் தினைத்தனைப்
பொழுதும் மறந்திருத்தல் சாலா தன்றே, அவன்றன் திருவடி
பிடித்து ஒழுகுதல் என் கடப்பாடெனக்கருதி அன்பு கொண்டாவது
அவனை வணங்குதல் வேண்டுமென்று, அடிகள் அருளுவது ஈண்டு
நோக்குதற்குரித்து.
இவ்வாறே நாட்டில் அச்சுறுத்தியோ, அன்பை
நிலைபெறுத்தியோ அரசு நிலைபெறுவது இயற்கை. அச்சத்தை
ஊட்டுவன படைகளே, அதனால் அரசர்கட்குப் படைகள்
முதலுறுப்பாக அமைந்தன, அச்சமின்றி அல்லது அன்பின்றி
ஆற்றும் எப்பணியும் உருவாகா. அச்சமென்பது வாளா திடுக்கிடுவதன்று.
தம் தகைமைக்கு ஒவ்வாத - உலகியலோடு ஒத்துவாராத -
ஒழுக்கத்துக்கு மாறுபட்ட நிலைகட்கு மனநடுக்கங்கொண்டு,
அவற்றைச் சாராதிருத்தலேயாம். இதனையே வள்ளுவப்பெருமான்,
‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்’
என்றருள்வாராயினர்.
எனவே, தீமையைக் கடிந்து நல்லாற்றில்
உலகை நிறுத்துதற்குப் படைப்பெருக்கம் வேண்டும்.
அப்படைகளும் கூற்றுவன்
|