நளவெண்பா

தன் ஒழுக்கங்கெடுவதோடு, அவன் உடல்நலங்கெட்டு விரைவில் இவ்வுலக வாழ்வையும் துறக்கும் நிலை, நேர்கின்றது. அதனால் உலகில் பழியும் பகையும் அச்சமும் தீமையும் ஒருங்கே அடைகின்றான். எனவே, இது கூடாது என்று விலக்குகின்றார்.

(2) கவறு ஆடல்: சூது விளையாடல். இது ஒன்றினைப்பெற ஆசைகொண்டு, அதனால் தன்னுடைய பல பொருள்களையும் இழக்க நேரிடுகின்றது. எனவே, மாந்தர்கள் தாம் மக்களாகப் பிறந்த மாண்பயன் கருதி, நாடு மொழி கலை முதலியவற்றுக்குச் செய்யும் கடப்பாடுகளும் கைவிடப்படுகின்றன ; தன் இல்லத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளும் மறக்கப்பெறுகின்றன ; அதனால் இச்சூதைக் கைக்கொண்டோன் வாழ்வில் இஃதே எண்ணமாய் அல்லும் பகலும் சூதாடி ஆடி அலமருவன். எனவே, இதுவும் ஒவ்வாது ; கூடாது எனக் கடிந்து கூறுகின்றார். இதற்கு இந்நளமன்னன் வரலாறே சான்று.

(3) கள்ளுண்டல்: கட்குடித்துக் களித்தல். இதனை விரும்பியுண்டவன் அறிவை ஒருங்கே கெடுத்து, அவனை எந்த வழியினும் நடக்கவிடாது அதை உண்டு உண்டு மயங்கிக்கிடக்கவே செய்யும். இது, வாழ்க்கையில் ஒருவனுக்குக் கொடியதேயாகும். இதிற் பழகினோர் பின்னர் இதனைக் கைவிடுதல் அரிதினும் அரிதாம். குடித்துக்குடித்துத் தன் செல்வத்தையெல்லாம் ஒருங்கே தொலைப்பதோடு, அறிஞர்களால் கீழ்மகன் எனவும் வெறுக்கப்படுகின்றான். வள்ளுவர் இக்கள்ளுண்போனைக் குறித்துக் கூறும்போது, ‘ஒருவன் கள்ளுண்டு களிப்பதைப் பெற்ற தாய்கூடப் பொறுக்கமாட்டாளெனின், இவன் சான்றோரின் அன்பை எவ்வாறு
பெறுவான் ?’ என்று ஏளனமாக உரைக்கின்றார். ஆகவே, இதுவும் ஏற்றதன்றென ஆசிரியர் கூறினார்.

(4) பொய்ம்மொழிதல்: உண்மையல்லாதவற்றைக் கூறுதல். அஃதாவது, தான் அறியாதவொன்றை அறிந்ததாகக் கற்பனை செய்து கூறி, பிறர்க்குத் தீமை பயக்குமாற்றைச் செய்தல். இது மிகக் கொடியது. இதனால், ஒருவன் பொய்சொல்லாத அறத்தைக் கடைப்பிடித்தொழுகுவானாயின் அவன் வேறு எந்த அறமும் செய்யவேண்டுவதில்லையென்றும், அவனை உயர்ந்த ஒருவனாக மதித்துப்போற்றுவரென்றும், அவன் உலகத்தார் உள்ளத்திலெல்லாம் விளங்குவனென்றும் அறநூல்கள் யாவும் முழங்குகின்றன. ஆதலால், பொய் கூறுதலை நீக்குதல்வேண்டும் என்று ஆசிரியர் விலக்குவாராயினார்.

(5) ஈதல் மறுத்தல்: ஒருவனுக்கு மற்றொருவன் ஒன்றைக் கொடுக்குங்கால், அதைக் கொடுக்காதவாறு தடுத்து நிறுத்துதல்.