புகழேந்திப்புலவர் வரலாற்றுச் சுருக்கம்

தண்டமிழ்வேலித் தமிழ்நாட்டகத்து நின்றுநிலைஇப் புகழ் பூத்த தொண்டை நாட்டின்கண், பொன்விளைந்த களத்தூரில் இந்நூலாசிரியராகிய புகழேந்திப்புலவர் பிறந்தனரென்ப. இதனை, ‘மாலார் களந்தைப் புகழேந்தி யும்தொண்டை மண்டலமே’ ‘ஐயன் களந்தைப் புகழேந்தி யாண்டான்’ ‘காரார் களந்தைப் புகழேந்தி’ என, வருகின்ற தொண்டைமண்டல சதகச் செய்யுளடிகள், இதற்குச் சான்றாக உணர்த்தல் அறிக. இப்பொன் விளைந்த களத்தூர், செங்கற்பட்டுக்கு அடுத்துள்ளது.

ஆசிரியரின் இயற்பெயர் புலனாகவில்லை. ‘புகழேந்தி’ என்பது, இவர் அறிவறிந்த பேரறிஞராய்ப் புலமையில் நிறைந்த புகழ்பெற்ற காரணத்தால் தமிழ்கூறு நல்லுலகு, இப்பெயர் சூட்டி இவரை அழைத்ததெனக் கொள்ளலாம். அறிஞருட் சிலரும் இவ்வாறே கருதுப.

இவர் துளுவ வேளாள மரபினரெனக் கூறுவர். இவர் தாய் தந்தையரைப் பற்றிய பெயரோ பிறவோ அறிதற்கில்லை. இவர் இந்நூற்கண் நாட்டு வருணனைகள் கூறுங்கால் ‘சடைச் செந்நெல் பொன் விளைக்கும் தன்னாடு’ போன்ற தொடர்களால் மருதநிலப் பண்புகளைக் கிளந்தெடுத்துக் கூறுதலானும் இவர் வேளாண் மரபினராதலை வலியுறுத்தும்; ‘வேளாண் மாந்தர்க்கு உழுதூ ணல்லது, இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொல், மரபில்: 80) எனத் தொல்காப்பியர் உரைத்தலால், உழவுத் தொழிலிற் பழக்கமாக இம்மரபினர்க்கே அமைதல் சிறப்பென்க.

இவர் வாழ்ந்த காலம், கம்பர் இருந்த காலமெனக் கூறுவர். இரண்டாங்குலோத்துங்கன் காலமே அஃதாகும் என ஆராய்ச்சி வல்லுநர் ஆய்ந்துரைப்பர் ; ஆனால் வரையறை செய்தற்கு ஏற்ற அகச்சான்றுகள் இல்லை ; இதைக்கொண்டால் பன்னிரண்டாம் நூற்றாண்டெனக் கருதலாம். எனவே, இற்றைக்கு எண்ணூறாண்டுகட்குமுன் தோன்றி வாழ்ந்தவரெனக்கோடலாம்.

புகழேந்தியார் சமயம், வைணவமேயென்று அறுதியிட்டு உரைக்கலாம். இந்நூல் மூன்று காண்டத்தினும் திருமாலுக்கே முதற்கண் ‘ஆதித்தனிக்கோலமாயினான் (பாயிரம்) எனவும், ‘முந்தை மறைநூல் முடியெனலாம்’ (கலிதொடர்: 1) எனவும், ‘மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்’ (கலிநீங்கு: 1) எனவும் வாழ்த்துக்கூறுதலானும் ஏனைய இடங்களிலும் திரு விதந்து கூறுதலானும் தெற்றென அறியங்கிடக்