பன்முகஞானம் முதலியனவும் பொதுளுமாறு எழுதியுள்ளனன்.
இக்காலத்துச் சீர்திருத்தக்காரர்கள் கூறும் சில தடைகட்கும், அவர்கள் உளம் கொண்டு ஏற்கும்
வகையில் தக்க காரணங்களுடன் விடைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அளவில் பெரிய புராணத்திற்கும்
சேக்கிழார்க்கும் யான் செய்த தொண்டினை நிறுத்திக்கொள்ள என் உள்ளம் ஒருப்பட்டிலது. என்
அவா அடங்கும் அளவுக்குப் பெரிய புராணத்திற்கும், சேக்கிழார்க்கும் இதனைவிட ஓர் அரிய பெரிய
தொண்டினைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை முற்றுப் பெற வைக்கச் சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
நூலினைத் துணையாகக் கொண்டனன்.
யான் கொண்ட எண்ணத்திற்கு ஒரு தூண்டுகோலாய்
அமைந்தவர், திருவாவடுதுறை ஆதீனத்து வித்துவான் திரு த. ச, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்
ஆவார். அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம் “ ஐயா ! நீங்கள் சேக்கிழார் பிள்ளைத்தமிழ்க்கு
உரை எழுதுங்கள் “ என்று அடிக்கடி தூண்டிவந்தனர். அவரது அன்புக்கட்டளையினையும் உளங்கொண்டு இவ்விளக்க
உரையினை எழுதலானேன்.
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
விளக்க உரையாகிய இந்நூலில் அரும்பத உரையையும் விளக்க உரையையும் எழுதியுள்ளனன். இவ்விளக்க
உரை சாதாரண உரையாக அமையாமல், பெருவிளக்க உரையாக அமைந்துவிட்டது. இப்பெரு விளக்க உரைக்கண்
திரு. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் கற்பனைத்திறன், நுண்ணறிவுத்திறன்,
கவிவளம், சைவ சமயப்பற்று, சித்தாந்தப் பேரறிவு, தாம் திருமுறைகளிடத்தில் கொண்ட ஈடுபாடு,
சைவ சமயாசிரியரிடத்துக் கொண்ட அன்பு, தொடர்பு கொண்டிருந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த
பற்று, குருமகாசந்நிதானங்களிடத்தில் வைத்திருந்த அன்பு, சந்தானாசாரியர்களிடத்தில் கொண்ட
அன்பு முதலியவை நன்கு எடுத்து எழுதப்பட்டுள்ளன.
திரு. பிள்ளை அவர்களின் பண்பு, கவித்திறன்,
அறிவின் திறன் மட்டும் இதன்கண் எழுதப்படவில்லை. நந்தம் அரும் |