வெந்தழல் நீராகும் வெள்ளெலும்பு பெண்ணாகும்
வந்தமத வேழம் வணங்கிடுமே - சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்
|
எனத் தமிழிசையின் மாண்பைப் போற்றுவார் ‘சொன்னதெல்லாம்
மறந்தாரோ? - என்னைச் சோதனை செய்யத் துணிந்தாரோ?’ என்னும்
பாடலும் ‘நல்லசகுனம் நோக்கிச் செல்லடி - சென்று நான் படும்
பாடவர்க்குச் சொல்லடி’ என்னும் பாடலும் தமிழிசை அரங்குகளில்
இசைவல்லார் உருகிஉருகிப் பாடுவதை உணர்ந்து மகிழலாம்.
‘அருணகிரிக்குச் செய்த கருணை செய்து அடியேனை ஆட்
கொள்ளலாகாதோ?’ என்று உருக்கமாகக் கேட்டார். கவிமணியின்
இசைப்பாடல்கள் எளிய, இனிய சொற்களால் அமைந்து இன்பம்
தருபவை.
மருமக்கள் வழி மான்மியம் ஒரு புதுமையான இலக்கிய
வகையைச் சார்ந்தது. எள்ளலும், இகழ்ச்சியும், சோகமும் நிறைந்த
சமுதாய விழிப்புணர்வு இலக்கியமாகத் திகழ்கின்றது. அங்கத
இலக்கியமாகத் திகழும் இந்நூல் நாஞ்சில் நாட்டு மக்களின்
வாழ்வியலை விவரிக்கும் அரிய நூலாகும். இம்மான்மியம் சட்டத்
திருத்தத்திற்கும் வழிகோலியதாகக் குறிப்பிடுவர். எனவே இந்நூலின்
சிறப்பை நாம் நன்குணரலாம்.
கவிமணி அவர்கள் தமிழின் அனைத்துத் துறைகளிலும்
ஈடுபட்டு அரிய படைப்புகளைத் தமிழுலகிற்கு வழங்கியுள்ளார்கள்.
அவர்தம் படைப்புகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய
பணியை மேற்கொண்ட ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தாருக்கு நம் இனிய
பாராட்டுதல்கள். பதிப்பக உரிமையாளர் திரு.சண்முகம் அவர்கள்
பெரிதின் முயன்று இப்பாரிய பணியைச் செய்துள்ளார்கள்.
கவிமணியின் படைப்புகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடும்
பேராசிரியர்
அ.கா.பெருமாள், பேராசிரியர் எஸ்.ஸ்ரீகுமார் ஆகியோர்
பெரிதும் பாராட்டத்தக்கவர்கள். இன்னும் நூல் வடிவில் இடம் பெறாத
பல பாடல்களையும் அரிதின் முயன்று தேடி அரிய குறிப்புகளோடு
பதிப்பித்துள்ளனர்.
கவிமணி குறித்துப் பல்வேறு ஆய்வு நூல்களும், கவிமணியின்
பாடல்கள் பல்வேறு பதிப்புகளாகவும் காலம் தோறும் வெளி
வந்துள்ளன. கவிமணியைப் பற்றிப் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளும்
வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றை முறையாகத் தொகுத்துப்
பல்வேறு தரவுக் |