அச்சு மட்டம்!

தீபாவளியன்று புதிது உடுத்தி முல்லைச்சரம் சூடி வெளியே வருகிறாள் பொன்னி. அவளின் முகம் காண வெளியே புத்தாடையணிந்து காத்திருக்கிறான். அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனையும் தன்னையும் மனக்கண்ணில் சேர்த்து நிறுத்தி பொருத்தம் நோக்குகிறாள். அவள் முடிவு என்ன ? கேளுங்கள்.

(பெண் பாடுவது)

  கொண்டைக்கு ஒத்த
கொல்லைப்பட்டி முல்லைச்சரம்
அவருக்கு ஒத்த
அச்சு மட்டம் நானலவோ ?
நாட்டுக்கு நாட்டு மட்டம்
நாமரெண்டும் சோடி மட்டம்
கார்ட்டுக்குப் போனாலும்
கோடி சனம் கையெடுக்கும்
கருப்புக்கு ஏத்த
கோயமுத்தூர் மல்பீசு
அவருக்கு ஏத்த
அச்சு மட்டம் நானல்லவோ ?

குறிப்பு: கோர்ட்-ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களுள் கோர்ட்டும் ஒன்று. கோயிலுக்கு என்று மேல் சாதிக்காரர்கள் பாடுவார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு கோயிலில் நுழையும் உரிமை இல்லாதிருந்ததால் அவர்கள் பாட்டில் கோயில் பொதுவாக இடம் பெறுவதில்லை.

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
நெல்லை மாவட்டம்.