நான்தானடி உன் புருஷன்

அவன் அவளுக்கு முறை மாப்பிள்ளை. அவளை மணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஒருமுறை அவளுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தான். அம்மோதிரம் அவர்கள் உறவை அலராக்கியது. எல்லோரும் கேலி பேசத் தொடங்கினர். புருஷன் என்று சொல்லிவிட்டால் போதுமா? நாலு பேரறிய தாலி கட்ட வேண்டாமா? இப்படி அவள் நினைத்துக்கொண்டே வேலைக்குச் செல்லுகிறாள். அவன் எதிர்ப்படுகிறான். அவள் பேச்சுக் கொடாமல் விரைவாகச் செல்லுகிறாள். அவனே அவளை அழைத்துப் புருஷன் உறவு கொண்டாடுகிறான். மோதிரம் தந்து உள்ளத்தைக் குலைத்துவிட்ட அவனைப் பார்த்து “இதுதானே என் பெருமை குலையக் காரணம்! உருவிக்கொள் இதனை” என்று கூறுகிறாள். அவன் நயந்து பேசுகிறான். அவள் தன்மேல் மையலுண்டா என்று கேட்கிறாள். அவன் உறுதியாக “நான் தானடி உன் புருஷன்”என்று பதில் சொல்லுகிறான். இருவரும் மகிழ்ச்சியோடு நடந்து செல்லுகிறார்கள்.

ஆண்: வெத்திலை போட்ட புள்ளே
விறுவிறுணு போற புள்ள
நாக்குச் செவந்த புள்ள
நாந்தானடி ஒம் புருஷன்
பெண்: கருத்தக் கருத்தத் துரை
கைக்கி மோதிரம் தந்தவரே
உருவைக் குறைச்சவரே
உருவிக் கோரும் மோதிரத்தை
ஆண்: ஜோடி பிரிச்சுராதே-என்
ஜோக்கு நடை மாதரசே
ஆடித் தவசு பார்க்க- நாம்
அழகாய்ப் போய் வருவோம்
பெண்: கரையிறங்கி வந்தவரே
கன்னி மையல் கொண்டவரே
மாடப்புறா சையலிலே
மையல் உண்டோ எம்மேலே
ஆண்: மூக்குச் செவந்த புள்ள
முக்காத் துட்டுப் பொட்டுக் காரி
நாக்குச் செவத்த புள்ள
நாந்தானடி ஓம் புருஷன்

வட்டார வழக்கு : முக்காத்துட்டுப் பொட்டு - முக்காத்துதட்டு அகலம் பொட்டு.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்;
நெல்லை மாவட்டம்.