|
நம்ம துரை
காதலியின்
கண்களுக்கு காதலன் உலகத்திலேயே சிறந்தவனாகத் தோன்றுவான். உருவத்திலும், பண்பு நலன்களிலும்
அவனே இணையற்றவன் என அவள் நினைப்பாள். காவியங்களில் வரும் காதலனைக் காதலி
வருணிக்கும் முறைகளை நாம் கண்டிருக்கிறோம்.
கீழ்வரும்
பகுதியில் காதலியர், தமது காதலர்களின் மேன்மையை வியந்து வருணிக்கும் பாடல்கள் தொகுத்துக்
கொடுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஒருவனைக் குறிப்பதில்லை;
பாடுபவளும் ஒருத்தியல்ல. ஆகவே பாட்டுக்குப் பாட்டுச் சில முரண்பாடுகள் காணப்படும். ஆனால்
பொதுவில் காதலி காதலனிடம் எதிர்பார்க்கும் நலன்கள் யாவும் இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சேக்கு ஒதுக்கி விட்டுச்
செந்துருக்கப் பொட்டு வச்சி
சோக்கு நடை நடந்தாச்
சொக் குதையா உங்க மேலே
மலையிலே நிழ லோட்டம்
மலைக்குக் கீழ் நீரோட்டம்
ஒங்க மேலே கண்ணோட்டம்
ஒடு தில்ல ஒரு வேலை
நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவிலே போறவரே
குறுக்குச் சவளுதையா
கடந்த லொரு பாகத்துக்கு
கணை யாழி மோதிரமே
நிழலாடும் பச்சைக் கல்லு
பச்சைக் கல்லும் பாவனைக்கும்
இச்சை கெர்ணடே(ன்) உங்க மேலே
ஆளும் சிகப்பல்லோ
அவரு நிறம் தங்க மல்லோ
குணமே சரஸ்வதியோ உங்க
குண மிருந்தாப் போதுமையா
|