நிற்கிறதும் சாமி தானோ ?

கணவன் சொல்லாமல் சென்று விட்டான். எதிர் பார்த்து பல தடவை ஏமாந்து விட்டாள் மனைவி. இன்று வருவார் என்றெண்ணி சோறும் கறியும் சமைத்துவிட்டு பலவிடங்களிலும் அவனைத் தேடிச் செல்லுகிறாள். தூரத்தில் எந்த ஆண்மகனைப் பார்த்தாலும், அவளுடைய தவிப்பில் அவனாக இராதா என்றெண்ணுகிறாள். கடைசியில் வீட்டுக்குச் சென்றதும் தலைவாசலில் அவன் வந்து நிற்கிறான். அவள் கவலையெல்லாம் மறைந்து போகிறது.

கிறிச்சி மிதியடியாம்
கீழ் கண்ணுப் பார்வையாம்
அருச்சலுல போறவரை
யாருண்ணும் தெரியலையே.
படர்ந்த புளிக் கம்மாயிலே
பாலன் தலை முழுகையிலே
நிறைந்த தலை வாசலிலே
நிக்கிறதும் சாமிதானே?
சின்னச் செடியசைய
சின்னச் சாமி நடையசைய
வருணச் செடி குலுங்க
வந்த சாமி நீங்க தானா?
கருவ மரத்துப் புஞ்செய்
கன்னி மூலை நேருக்கு
நெல்லி மரத்தடியில்
நிக்கிறதும் சாமி தானா?
ஆட்டுக் கிடா சோறிருக்க
அழுதுகிட்டு நானிருக்க
வாடா விளக்கிருக்க
வந்தவனத் தெரியலியே!
புளிய மரத்தடியில்
புள்ளையார் கோவிலோரம்
சத்திரத்தின் வேம்போரம்
சாமி தானோ நிக்கிறது?
உயர்ந்த தலைவாசல்
உல்லாச வல்ல வாட்டு
நிறைந்த தலை வாசலில
நிக்கிறதும் சாமிதானோ?

வட்டார வழக்கு: அருச்சல்- urgent -அவசரமாக (திரிபு ); கம்மாய்-பாசனக் குளம் (நெல்லை, ராமநாதபுரம் வழக்கு ) ; நிக்கிறது-நிற்கிறது.

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
நெல்லை மாவட்டம்.