|
முறிவு
உழைக்கும் மக்களில் சில ஜாதிப் பிரிவினரில் விவாரத்து சமூக
வழக்கமாக நெடுநாளாக இருந்து வருகிறது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவதாலோ குழந்தை இல்லாததாலோ,
ஆணோ பெண்ணோ, துர்நடத்தையுடையவராயிருப்பதாலோ, சமூக வழக்கப்படி விவாகரத்துச் செய்து
கொள்ளலாம். விவாரத்து கோருபவர் ஊருக்குத் தீர்வை செலுத்த வேண்டும். விவாரத்து செய்து
கொண்டவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். சில வேளைகளில் பொய்க் காரணம் கூறி ஆண்கள்
விவாரத்து கோருவதும், பெண் சமூக ஆதிக்கத்துக்கு அஞ்சி சம்மதிப்பதும் உண்டு. விவாரத்து
செய்துகொள்ள சம்மதிக்காத ஒருத்தி, தனது கணவனிம் கொடுமையை விவரித்து ஒரு பாடலைப்
பாடுகிறாள்.
(பெண்
பாடுவது
)
காடைக் கண்ணி மாவிடிச்சு
கருப்பட்டியும் சேர்த்திடிச்சு
திண்ணு ருசி கண்ட பய
தீருவையும் கேட்கிறானே
கூடுனமே கூடுனமே
கூட்டுவண்டிக் காளை போல
விட்டுப் பிரிஞ்சமையா
ஒத்த வண்டிக்காளை போல
பின்கல்லு மோதிரமே
பிரியாத சினேகிதமே
பிரியிறகாலம்வந்து
பேருசொல்லிக்கூப்பிடுறேன்.
தொட்டேன் சிவத்தாளை
தூது விட்டேன் தன்னாளை
மறந்தேன் சிவத்தாளை
மாசம் பன்னிரண்டாச்சே
அச்சடிச் சேலை வாங்கி
அஞ்சு மாசம் வச்சுடுத்தி
முந்தி கிழிய முன்னே
முறிஞ்சதையா நம்முறவு
கருத்தக் கருத்த சாமி
கைக்கு மோதிரம் தந்தசாமி
உருவங் குலைத்த சாமி
உருவிக்கோடா மோதிரத்தை
முத்துப் பல்லு நல்லாளு
முகத்திலேயும் சித்தாளு
பாக்குத் திங்கும் நல்லாளு
பகைத்தேனே சொல்லாலே
சேர்ந்து இருந்தோமையா
சேலத்துக் கொண்டை போல
நாரை வந்து மீனைத் தொட
நைந்ததையா நம்முறவு
வெள்ளை உடுப்பிழந்தேன்
வெத்தலைத் தீன் மறந்தேன்
வஞ்சிக் கொடி போனண்ணிக்கு
கஞ்சிக்குடி நான் மறந்தேன்
லோட்டா விளக்கிவச்சேன்
ரோசாப்பூ நட்டி வச்சேன்
லோட்டா உடைஞ்சிருச்சு
ரோசாப்பூ வாடி நிக்கேன்
சோளத்துக் குச்சிலிலே
ஜோடிப் புறா மேயயிலே
ஜோடி பிரிஞ்சவுடன்
சோர விட்டேன் கண்ணீரை
வட்டார வழக்கு:
நாரைவந்து மீனைத் தொட-புதிய பெண் வாழ்க்கையில் தலையிட்டு என் ஜோடிமீனைக் கொத்தி
விட்டாள்;
தீன்-தீனி, தின்னுவது; போனண்ணிக்கு-போன அன்றைக்கு.
|
சேகரித்தவர்
:
S.S.
போத்தையா |
இடம்
:
சூரங்குடி,விளாத்திக்குளம்வட்டம்,
நெல்லை மாவட்டம். |
|