தாளம் போட்டு நடக்கிறாளே !

அடிக்கடி அவன் வேளியே போகும்பொழுது அவனுடைய நண்பர்கள் அவனோடு போகிறார்கள். அவனுடைய காதலி அவனைத் தனிமையில் சந்திக்க விரும்புகிறாள். கூட்டத்தில் போகும்பொழுது எப்படி அவனை அழைப்பதென்று அவனைக் கேட்கிறாள். அவன் அதற்குப் பதில் சொல்லாமல் அவள் மீது அவனுக்கிருக்கும் ஈடுபாட்டையும், காதலையும் வெளிப்படையாகச் சொல்லுகிறான். அவள் நாணமடைந்து முகஞ்சிவக்கிறாள்.

காதலி: ஆளு கருத்தாளு
அரமனைக்கு ஏத்த ஆளு
ஆளோடு போகும் போது-நான்
ஆரை விட்டுக் கூப்பிடட்டும்?
வெத்தலையைக் கையிலெடுத்து
வெறும் பாக்கை வாயில் போட்டு
சுண்ணாம்பு இல்லையின்னு
சுத்தி வந்தால் ஆகாதா?
 
காதலன்: சாலையடி ரோட்டுப்பாதை
காலு கையை வீசிப்போட்டு
தங்கப் பானைகுடம்
தவல பானை தலையில
தாழமடம் கொண்ட குப்பி
சாலையிலே என்னைக்கண்டு
தாளம் போட்டு
நடக்கிறாளே நடையிலே!
களைபிடுங்கி கைகழுவி
கரைப் பாதை போற பொண்ணே
முகம் கழுவி முத்தம் தந்தால்
வாயிரம் பொன் தருவேன்
சிரகி பறக்குதடி
சீனாவானா கம்மாயிலே
சீவன் கிடக்குதடி
செண்டு மலர் ஒண்ணுலேயும்.

வட்டார வழக்கு: சிரகி-குருவி; சீனாவானா கம்மாய்-குளத்தின் பெயர் (சீனாவானா என்பவர் தூத்துக்குடியில் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்); செண்டு மலர் ஒண்ணு-காதலியைக் குறிப்பிடும்.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
தூத்துக்குடி வட்டாரம்.