இந்தாடா உன் தாலி
திருமணமானது முதல் கணவன், தன் மனைவியின் சமையலைக் குறை
கூறிக் கொண்டே வருகிறான். எவ்வளவு முயன்று, ஆர்வத்துடன் சமைத்தாலும் அவனுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
புதிய புதிய பண்டம், பணியாரங்களும், பலகாரங்களும் செய்து அவனுக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றும்
தோல்வியடைகிறாள் மனைவி. அவளுடைய அன்பையும்
தன்னை மகிழ்விக்க அவள் செய்யும் முயற்சியையும்
அவன் உணர்ந்து பாராட்டவில்லை. “பொறுமை ஒரு நாள் புலியாகும்”
என்று பாடினான் நாட்டுக் கவிஞன் கல்யாண சுந்தரம்.
அதுபோல அவள் சீறுகிறாள். தாலிக் கயிற்றை அடிமை விளக்கென எண்ணுகிற கணவனைப் பார்த்து
“இந்தாடா உன் தாலி”
என்று கூறுகிறாள். அவன் தன் பக்கம் பழமையான வழக்கங்கள் மட்டுமல்லாமல்,சட்டமும்,
நீதியும் இருப்பதாகக் கூறுகிறான். பழைய சட்டங்கள் பெண்களை அடிமைகளாக்கி கணவனுக்கு அடங்கி
வாழ்வதற்குத்தானே துணை நின்றன? அவள் வழக்கத்தை மட்டுமில்லாமல், தன்னை அடிமையாக வாழக்
கட்டாயப்படுத்தும் சட்ட்த்தையும் மீறுவதற்கு துணிகிறாள்.
இவ்வுரையாடல், அன்பும், பாசமும், பண்பும் கணவன் மனைவி உறவி்ல்
இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. அவ்வாறில்லாது
“மாட்டை
வசக்கித் தொழுவினில் கட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட
வந்தார்”
என்ற நிலையில் கணவன் போக்கு இருந்தால்,
“அதை வெட்டி விட்டோம் என்று
கும்மியடி”
என்று பாரதியின் புதுமைப் பெண் கூறுவதைத் தற்கால உழவன் மகள் பின்பற்றுவாளா?
பெண்
: |
குத்தின அரிசி
ஒரலிலே
கொளிச்ச
அரிசி மொறத்திலே
ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின
இந்தாடா மாமா
உன்தாலி
|
ஆண்
:
|
தாலி குடுத்தாலும்
வாங்கமாட்டேன்
தாரங் குடுத்தாலும் வாங்கமாட்டேன்
முப்பது பணத்தை முடிச்சு
கட்டினு
எப்ப வருவியோ
கச்சேரிக்கு
|
பெண்
:
|
கச்சேரிக்கும்
வரமாட்டேன்-போடா
கட்டி இளுத்தாலும் நான் வல்லே.
ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின
இந்தாடா மாமா உன் தாலி |
வட்டார வழக்கு
:
ஒரல்-உரல்
;
வல்லை-வரவில்லை
;
கட்டினு-கட்டிக் கொண்டு
;
உண்ணானம்-விண்ணாமை.
குறிப்பு
:
தென் பாண்டி நாட்டு உழவர் சாதிகளில் “அறுத்துக்கட்டும்”
வழக்கம் உண்டு. மணமுறிவு சற்று எளிதாகவேயிருக்கும்.
ஆனால் மணமுறிவு கோருபவர்கள்
“தீர்த்துக்கட்டும் கூலி”
அல்லது “அறுப்புப்பணம்”
என்ற தொகையை முதல் கணவனுக்குக் கொடுத்துவிட வேண்டும், பரிசத் தொகையையும் கொடுத்துவிட
வேண்டும். இவற்றைக் கொடுக்க முடியாதவர்கள்
ஏராளமாக இருப்பதால், மணமுறிவு கருத்தளவில் தான்
எளிது.அதைத்தான் இப்பாடலில் இரண்டாம் செய்யுளில்
கணவன்
“முப்பது” பணம் கொண்டு கச்சேரிக்கு
வா என்று கூறுகிறான்.
சேகரித்தவர்
:
சடையப்பன் |
இடம்
:
சேலம் மாவட்டம். |
|