மருந்து வைத்து விட்டாரா?
ஒருவரை மயக்கிக் கவர்ச்சிப்பதற்கும், ஒருவரை வெறுக்கச் செய்வதற்கும்
மருந்து வைப்பது என்ற முறையில் கிராம மக்களுக்கு நம்பிக்கை உண்டு. இது மந்திரவாதத்தின்
அடிப்படையில் நடத்தப்படும் செய்வினை. இப்பாடலில் வரும் பெண் தனது காதலனை அவனது பெற்றோர்
மருந்து வைத்து மயக்கி தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகச் சொல்லுகிறாள். ஆனால் கடைசியில்
மருந்தின் மயக்கமல்ல, அவனது மயக்கம்தான் தன்னைக் கைவிடக் காரணமென்றும்
சொல்லுகிறாள். இளைய பள்ளி, பள்ளனுக்கு மருந்து வைத்து வசப்ப்படுத்திக் கொண்டாள் என்று
முக்கூடல் பள்ளு கூறுகிறது. குருகூர்பள்ளு, அவ்வாறு கூறுவதோடு மருந்து செய்யும் முறையையும் விவரமாகக்
கூறுகிறது. உறுதியின்மையை, மருந்தின் விளைவென்று நம்புவோர் காதலை உதறியவனைக் கண்டிக்க
மாட்டார்கள். ஆனால் இப்பெண் அவனையே தனது அவல நிலைக்குப் பொறுப்பாக்கித் திட்டுகிறாள்.
(பெண் பாடுவது)
மறக்க மருந்து வச்சு
மன்னவர்க்கே தூது விட்டு
என்னை மறக்கச் சொல்லி
என்ன பொடி தூவினாரோ?
முந்தி அழுக்கானேன்
நுனி மயிரும் சிக்கானேன்
ஆரஞ்சி மேனியெல்லாம்
அவராலே அழுக்கானேன்
விரிச்சதலை முடியாம
வேந்தங் கூட சேராம
அரச்ச மஞ்சுச குளியாமே
அலை யுதனே இக்கோலம்
ஓலை எழுதி விட்டேன்
ஒம்பதாளு தூது விட்டேன்
சாடை எழுதி விட்டேன்
சன்னல் கம்பி வேட்டியிலே
நெடுநெடுணு வளர்ந்தவரை
நீலக்குடை போட்டவரைப்
பச்சக்குடை போட்டவரைப்
பாதையில் கண்டியளோ?
ஆத்துக்குள்ள ஆதாள-என்னை
ஆகாதென்று சொன்னவரே
தோப்புக்குள் தொயிலயிலே-என்னைத்
தொட்டிட்டும் போகலாமா?
வெள்ள வெள்ளக் கொக்கை
விளையும் சம்பா அழிச்ச கொக்கை
கண்ணியிலே பட்ட கொக்கை
கடை வீதியில் கண்டியளா?
ஆத்துக்குள்ள கூட்டிக்கொண்டு
அன்பான வார்த்தை சொல்லி
தேத்திக் கழுத்தறுத்தானே
தேவடியாள் பெத்த மகன்
மேற்கண்ட பாட்டின் கருத்தையொத்த
தனிப் பாடல் ஒன்று வருமாறு
:
மதுரைக்குப் போவாதிங்க
மாங்கா தேங்கா வாங்காதிங்க
மதுரைச் சிறுக்கியல்லோ
வச்சுருவா கை மருந்து
குறிப்பு
:
தன்னுடைய பெண்மையை அழித்தவனுக்கு, விளையும் சம்பா அழிச்ச
கொக்கு என்று கூறுகிறாள்.
சேகரித்தவர்
:
S.M.
கார்க்கி |
இடம்
:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|