தரும துரை
மன்னர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் புகழ்ந்து பாடப்படுவது
அரிது. ஏனெனில் நாட்டு மக்கள் மன்னர்களை நேரில் காண்பதோ, அவர்களது அன்பை நேரில்
பெறுவதோ முடியாது. சமீப கால மன்னர்கள் மக்களுடைய வாழ்க்கையில் புலப்படும்படியான பொதுநலப்
பணிகள் எவற்றையும் செய்ததில்லை. தாங்கள் வாழ மாட மாளிகைகளையும், தங்கள் புகழ்
விளங்க கோயில்களுக்கு மதிற்சுவர்களும், கோயில்களும் கட்டினார்களேயன்றி ராணி மங்கம்மாளைப்போல
ஓரிருவர்தான் மக்கள் நலன் கருதி பொதுப்பணிகள் செய்தார்கள். முஸ்லீம் மன்னர்களின்
படையெடுப்பின் போதும், ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போதும் மக்களைத் திரட்டி எதிர்த்த
சிற்றரசர்கள் தோல்வியுற்று மறைந்துவிட்ட போதிலும் நாட்டுப் பாடல்களில் அவர்கள் அழியாத
இடம் பெற்றார்கள். ஆனால் மக்கள் நலன் கருதாது இன்ப வாழ்க்கை நடத்தி மறைந்துபோன
மன்னர்கள் நாட்டுப் பாடல்களில் இடம் பெறவில்லை. மதுரைக்கோபுரம் கட்டிய மன்னனொருவன்,
சாலையில் தங்கும்விடுதி கட்டி, தண்ணீர்ப் பந்தலும் வைத்ததால் இந் நாட்டுப்பாடல்
புகழ்ந்து போற்றுகிறது. மதுரைக் கோபுரம் கட்டியதைவிட
‘தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கிற தருமம்’தான்பெரிதென்று
இந்நாட்டுப் பாடல் கூறுகிறது.
கல்லுமே கல்லுமே கல்லுருட்டி
கல்லுக்கும் கல்லுக்கும் எணை கூட்டி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மன்னவன் வாரானாம் பாருங்கடி
சன்னலு,பின்னலு சாலையிலே
தங்கு மடம் ஒண்ணு கட்டி வச்சி
தவிச்ச வாயிக்கி தண்ணி குடுக்கிற
தரும துரையும் வாராராம்.
சேகரித்தவர்
:
S.S.
சடையப்பன் |
இடம்
:
அரூர்,தருமபுரி
மாவட்டம். |
|