தங்கச் சுரங்கம்
கோலாரிலுள்ள தங்கச் சுரங்கத்தில், தொழில் செய்யும்
பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களிலே ஒருவன் தனது தாயாரை வி்ட்டு தனியாக அங்கே
வாழ்கிறான். சுரங்கத்தினுள் இறங்கும்பொழுது திரும்பி வந்தால்தான் நிச்சயம் என்று அவன்
அஞ்சுகிறான். அன்னையை நினைத்துக் கொண்டு தைரியமாக இறங்கிச் செல்கிறான். அவன் உள்ளிருக்கும்போதே
தங்கம் எடுப்பதற்காகப் பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். இவ்வாறு நம் நாட்டார்
ஆபத்துகளுக்கு உட்பட்டு தைரியமாக வேலை செய்து தங்கம் எடுத்துக் கொடுக்கிறார்கள். ஆனால்,
அவர்கள் வேலை செய்தும் பட்டினியாக இருக்கும்பொழுது வெள்ளைக்காரன் தங்கக் கல்லையெல்லாம்
கப்பலிலே ஏற்றித் தன் நாட்டுக்கு அனுப்புகிறான். அவன் தன் நிலையை மட்டுமல்லாமல் நாட்டின்
நிலையையும் நினைத்து வருந்துகிறான். பின்வரும் பாடல் சுரண்டலை எதிர்க்கும் தொழிலாளியின்
உணர்வையும் அவனது நாட்டுப்பற்றையும் வெளியிடுகிறது.
மாடு துண்ணி, மாடு துண்ணி
வெள்ளைக்காரன்-ஏலமா ஏலம்
மாயமாத்தான், மாயமாத்தான்
கிணியிறங்கி
கிணியிலத்தான்;
கிணியிலத்தான்
எறங்கும் போது ஏலம், ஏலம்
தாயாரையும், தாயாரையும்
நினைக்கிறேண்டி
ஊசிபோல, ஊசிபோல
டமார் கொண்டு ஏலமே ஏலம்
ஒதுக்கி விட்டான், ஒதுக்கி விட்டான்
பொன்னுங்கல்லே
கல்லை யெல்லாம், கல்லை யெல்லாம்
ஒண்ணாச் சேத்து ஏலமே ஏலம்
கப்பலுல கப்பலுல
ஏத்திட்டானாம்
வட்டார வழக்கு:
துண்ணி-தின்னி;
கிணி-இறங்கு
பொறி;டமார்-வெடி
மருந்து.
சேகரித்தவர்:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
கொங்கவேம்பு,
தருமபுரி மாவட்டம். |
|