நின்னொரு நாள் வாழலியே

மலையோரத்துக் கிராமம் ஒன்றில் இளைஞன் ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு மணமாகி மனைவியோடு இன்பமாக வாழ்ந்து வந்தான். அவ்வூராருக்கும், அடுத்த ஊரில் வாழ்ந்து வந்த வேறு ஓர் சாதியினருக்கும் நீண்ட நாளாகப் பகைமை உண்டு. இப்பகை முற்றி கலகமாக மாறிற்று. அவர்கள் படையெடுத்து வந்து பகல் வேட்டுப் போட்டு ஊரைக் கொள்ளையிட்டார்கள். இளைஞன் ஊரைக் காப்பாற்ற போராடினான். போராட்டத்தில் அவன் உயிர் நீத்தான். உளுந்தும், சாமையும் காயப்போட மலைச்சரிவுக்குச் சென்றிருந்த அவனது மனைவி செய்தி அறிந்து அரற்றினாள். அழுதடித்துக் கொண்டு ஊர் திரும்பினாள். அவனுடைய தங்கைக்கு ஆள் விட்டாள். அவள் அவனோடு வாழ்ந்தது சில ஆண்டுகளே. ஆயினும் வயல் வேலைகளை யெல்லாம் இருவரும் சேர்ந்தே மகிழ்ச்சியோடு ஒத்துழைத்துச் செய்து வந்தனர். அவளுடைய உணர்ச்சித் துடிப்பும், வருங்காலம் பற்றிய துன்ப நினைவுகளையும் எண்ணி ஒப்பாரியாகப் பாடி புலம்புகிறாள். இவளது தனிமையைப் போக்கக் குழந்தையும் இல்லை.

கொள்ளை

பட்டணமும் ஜில்லாவாம்
பவுஷாப் பிழைக்கையிலே
பகல் வேட்டுப் போட்டல்லவோ
பட்டணத்தைக் கொளைளையிட்டார்
தெக்ஷிணையாம் ஜில்லாவாம்
செருக்காப் பிழைக்கையிலே
தீ வேட்டுப் போட்டல்லவோ
தெக்ஷிணையைக் கொள்ளையிட்டார்

வருமுன் மாய்ந்தான்

உருண்ட மலையோரம்
உளுந்து கொண்டு காயப்போட்டேன்
உளுந்து அள்ளி வருமுன்னே-உன்னோட வாசலில
உருமிச்சத்தம் கேட்டதென்ன
சாய்ஞ்ச மலையோரம்
சாமை கொண்டு காயப்போட்டேன்
சாமி வருமுன்னே
சங்குச் சத்தம் கேட்டதென்ன?

பிள்ளையில்லை

முட்டங்கால் தண்ணியில
முத்தப் பதிச்சு வச்சேன்
முத்தெடுக்கப் பிள்ளையுண்டோ?-உனக்கு
முடியிறக்கப் பிள்ளையில்லை
கரண்டக்கால் தண்ணியில
காசப் புதைச்சு வச்சேன்
காசெடுக்கப் புள்ளையுண்டோ?-உனக்கு
கருமம் செய்யப் புள்ளையில்லை