|
செல்வன் சிறுவயசு
சிறு ஆண் குழந்தையோடு மனைவியையும் விடுத்துக் கணவன் மாண்டு
போனான். குழந்தையில்லாமல் விதவையாக விடப்பட்டவளின் நிலைமையை விட இவள் நிலைமை
சற்று உயர்ந்ததே. மலடியான விதவை மைத்துனர்மாரிடம்
‘கூலிப்படி’ வாங்கித்தான் வாழ வேண்டும். இவளுக்கு மகனிருப்பதால்
சொத்துரிமையுண்டு. ஆனால் சிறுமகன் துண்டு நிலத்தைப் பாதுகாக்கும் வலிமையுடையவன் அல்லவே
!
சிறுநிலம்
உடையவர்களுடைய நிலத்தைப் பறித்துக்கொள்ள பெருநிலக்கிழார்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்வார்கள்?
களத்தில் போர் போட்டிருக்கும்பொழுது மாட்டை விரட்டியடிப்பதும், விளைந்த வயலில் எருதை
விரட்டியடிப்பதும், எதிர்த்து வந்தால் வழக்குப் போடுவதுமான முறைகளால் நிலத்தை தங்களுக்கே
விற்றுவிடச் செய்வதும் அவர்கள் கையாளும் முறைகள். இச் சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராட
வலிமை வாய்ந்த ஆண்களாலேயே முடியாது. சிறுவன் என்ன செய்வான்? இச் சிந்தனை அவளுக்குக்
கவலையை உண்டுபண்ணுகிறது.
மத்தங்கா புல்லு வெட்டி
மலையோரம் போர் போட
மலையோரம் போரிலே தான்
மாடு வந்து மேயுதிண்ணு
மாதுளம்பூ சாட்டை கொண்டு
மாட்டை விரட்டிவிட
மைந்தன் சிறுவயசு-நான்
மனசொடிஞ்சு போனேனே
இஞ்சிக்கா புல்லு வெட்டி
எடையோரம் போர்போட
எடையோரம் போரிலேதான்
எருது வந்து மேயுதிண்ணு
எலுமிச்சங்க சாட்டை கொண்டு
எருதை வெரட்டி விட
என் செல்வம் சிறுவயசு-நா
செருவடைஞ்சு போறேனே
வட்டார வழக்கு
:
செருவடைஞ்சு-சோர்வடைந்து
;
மத்தங்கா-இஞ்சிக்கா,
ஒரு வகை நெல்
;
மாதுளம்பூச்
சாட்டை, எலுமிச்சங்க சாட்டை-சாட்டை கம்பின் நிறம் பற்றிப் பெயர் வந்திருக்கலாம்.
|
உதவியவர்
:
நல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம். |
|