|
பனிக்காத்தும்
வீசலாச்சு
கணவன் அவளுக்கு ஓர் கருங்கல் மாளிகை. அவன் உயிரோடு இருக்கும்
வரை எறும்பும் காற்றும் நுழையாமல் பாதுகாக்கும் கருங்கல் கோட்டையாக அவன் அவளைப் பாதுகாத்தான்.
அவன் போய்விட்ட பிறகு முன்பிருந்த மண்குடிசையில் தான் வாழ்கிறாள். ஆனால் அதைச்
சுற்றியிருந்த கருங்கல் சுவர் தகர்ந்துவிட்டது. ஊர்ப்பேச்சும், பிறர் கண்களும் அவளைத்
துளைக்கத் தொடங்கும். இவை தான் எறும்பும், காற்றும், அவனிறந்ததும்தான் அவனுடைய
பாதுகாப்புத்திறன் அவளுக்குப் புரிகிறது.
எட்டுக் கெசம் கல்லொடச்சு
எறும்பேறா மாளி கட்டி
எறும்பேறா மாளியிலே
இருந்தொறங்கும் நாளையிலே
எறும்பும் நொழையாது
எதுக்காத்து வீசாது
சின்ன நடையிழந்து
சிறுமுழியும் பஞ்சடைய
எறும்பும் நுழையலாச்சு
இருபக்கமும் பேசலாச்சு
பத்துக் கெசம் கல்லொடச்சு
பாம்பேறா மாளிகை கட்டி
பாம்பேறா மாளியிலே
படுத்தொறங்கும் வேளையிலே
பாம்பும் நொழையாது
பனிக்காத்து வீசாது
அண்ணாந்து கண்ணசைந்து
ஆவாரம் பூ வாய்மூடி
அமக்களமாப் போறான்னு
பாம்பும் நொழையலாச்சு
பனிக்காத்தும் வீசலாச்சு
வட்டார வழக்கு
:
நொழை-நுழை
;
அமக்களமாய்-மேள
தாளத்தோடு சுடுகாடு நோக்கிச் செல்லுகிறான்
;
காத்து-காற்று(பேச்சு).
|
உதவியவர்
:
நல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம். |
|