|
அணிந்துரை
டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை,
B.A., B.L., D.Litt.
முன்னாள்
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை.
"நல்ல
தமிழ் வழங்கும் நாடு" என்று பல்லாராலும் பாராட்டப் பெறுகினற
பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியிலிருந்து வருகின்றது "நல்ல
தமிழ் எழுத வேண்டுமா?" என்னும் இந்நூல். மதுரை மாநகரில் தமிழப்
பெருமகனாகத் திகழும் திரு. தியாகராசச் செட்டியார் அவர்கள் நிறுவிய
கல்லூரியில் ஆர்வமுறத் தமிழ்ப்பணியாற்றும் அறிஞர் அ.கி. பரந்தாமனார்,
வழுவின்றித் தமிழ் எழுத இந்நூலில் வழி காட்டுகின்றார்.
தமிழ்மொழி,
ஆட்சி மொழியாகும் காலம் நெருங்கிவிட்டது.
தமிழ்
வெளியீடுகளும் நாளிதழ்களும் நல்ல தமிழில்
வெளிவரல் வேண்டும்.
எழுத்தாளர்கள் பிழையின்றி எழுதவேண்டுமானால், ஓரளவு நடைமுறை
இலக்கணம் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது.
இந்நூலாசிரியர்
நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர். எனவே
பெருவரவாகக் காணப்படும் பிழைகளை இவர் இந்நூலில்
எடுத்துக் காட்டித்
திருத்தங்களையும் கொடுத்துள்ளார்; வல்லெழுத்துமிகும்
இடங்களையும் மிகாத
இடங்களையும் எளிய முறையில் விளக்கியுள்ளார்; சந்தி முறைகளை மிக
எளிதாகக் காட்டியுள்ளார்; சொற்றொடர்ப்பிரிப்புகளில்
ஏற்படும் தவறுகளை
எடுத்துக்காட்டி விதிகளையும் வகுத்துள்ளார். ஆதலால், நல்ல தமிழ்
எழுத
விரும்பும் பலர்க்கும் இந்நூல் பயன்படக்கூடியது. காலத்திற்கேற்ற இந்நூலைக்
கற்றுத் தமிழகம் நற்றமிழைப் பேணி வளர்க்கும்
என்று நம்புகிறேன்.
|
1-1-1955 |
ரா.பி.சேதுப்பிள்ளை |
|