பக்கம் எண்: - 103 -

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

உடலை வருத்திக் கடுமையான தவங்கள் செய்து வாட வேண்டியதில்லை. நெஞ்சு உருகிக் கடவுளை வழிபட்டால் போதும் என்பதே ஆழ்வார்களின் கொள்கை ஆகும்.  “மலையிலே போய் நின்றும், நீரின் நடுவே மூழ்கியும், ஐந்து நெருப்புகளின் இடையில் நின்றும் தவம் செய்யத் தேவையில்லை. கடவுளை உண்மையான அன்புடன் மலர்கள் தூவிக் கைதொழுது வழிபடுதல் போதும், தீவினைகள் வந்து சேராமல் போய்விடும்” என்கிறார் பேயாழ்வார்.

இவ்வாறு ஆறாம் நூற்றாண்டில் சில சான்றோர்கள் விதைத்த விதை, பெரிய பக்தி இயக்கமாய் வளர்ந்து ஏழு எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாடு முழுதும் பரவியது; மக்களின் உள்ளத்திலும் ஆளும் அரசர்களின் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றது; ஊர்தோறும் அவர்களின் பக்திப் பாடல்கள் பரவின. அந்தப் பாடல்களின் பெருமையால் அங்கங்கே இருந்த கோயில்களின் புகழ் பெருகியது. கோயில் கட்டடங்கள் உயர்ந்தன. தமிழ் நாட்டை அடுத்த மற்ற நாடுகளிலும் பக்தியியக்கம் மெல்ல மெல்லப் பரவியது; வடக்கே உள்ள நாடுகளிலும் அந்தந்த மொழிகளில் பக்திப் பாடல்கள் தோன்றின. இவ்வாறு தமிழ்நாட்டில் ஆழ்வார் நாயன்மார்கள் பாடிய பாடல்கள் இந்தியா முழுவதும் பக்தியிலக்கியம் வளர்வதற்குக் காரணமாக அமைந்தன.

தேவாரம்

நாயன்மார்களில், ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. தமிழ்நாட்டின் சிவன் கோயில்கள் பலவற்றிற்கும் இவர்களின் பாடல்கள் உள்ளன. மறைந்த பாடல்கள் போக, இப்போது உள்ள இவர்களின் பாடல்கள் ஏறக்குறைய ஏழாயிரம். அடுத்த நூற்றாண்டில் வந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல்கள் ஆயிரம் கிடைக்கின்றன. இந்த மூன்று நாயன்மார்களின் பாடல்கள் எண்ணாயிரமும் தேவாரம் என்ற பெயரால் சிறந்த பக்தி இலக்கியமாக விளங்குகின்றன. இவை எல்லாம் அன்று முதல் இன்றுவரையில் இசையோடு இன்ன பண் என்று குறித்துப் பாடப்பட்டு வருகின்றன. திருஞானசம்பந்தர் கையில் தாளம் ஏந்திப் பாடியும் ஆடியும் சிவனை வழிபட்டவர். யாழ் என்னும் கருவியை இசைப்பதில் வல்ல பாணர் குடும்பத்தைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடன் பல ஊர்க் கோயில்களுக்குச் சென்று, அவருடைய பாடல்களுக்கு ஏற்றவாறு யாழ் இசைத்து வந்தார். அந்த இசைக்