பக்கம் எண்: - 104 -

கலைஞரின் வழியில் வந்தவர்கள் - அவருடைய குடும்பத்தார் - தலைமுறை தலைமுறையாக அந்தப் பாடல்களைப் பாடுவதற்கு உரிய இசை மரபுகளைக் காத்துவந்தார்கள். அவர்கள் தந்த இசைக்குறிப்புகளே இன்றும் உள்ளன. ஆகவே, தேவாரம் பழம் பெருமை வாய்ந்த பக்திப் பாடல்களாக இருப்பதோடுமட்டும் அல்லாமல், ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் இருந்த நாட்டின் இசைமரபுகளைக் காத்துவரும் பழைய இசைச் செல்வமாகவும் இருந்து வருகிறது. ஏறக்குறைய எண்ணாயிரம் பாடல்கள் இவ்வாறு பழைய இசைக்குறிப்புகளோடு உள்ளன. இவ்வளவு பழமையான இசைச்செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்குக் கிடைக்கவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் பிள்ளைப் பருவத்திலேயே இறைவனைப் பாடியவர். ஆடல் பாடல் ஆகிய கலைகள் வழிபாட்டுக்கு உரியவை ஆக்கியவர் அவர். பல பாடல்களில் அந்தந்த ஊர்க்கோயில்களைப் பாடும் இடத்தில், கோயில்களைச் சூழ்ந்த இயற்கை அழகுகளை எடுத்துரைத்துள்ளார். சங்க இலக்கியத்திற்கு அடுத்தபடி, இயற்கையின் அழகைப் பலவாறு பாடிய சொல்லோவியங்களை அவருடைய தேவாரத்திலே காணலாம். திருவையாறு என்னும் தலத்தைப் பாடும் இடம் இது: “கோயிலை வலம்வரும் மகளிர் நடனம் ஆடும் ஓசையையும் அவர்களின் நாட்டியத்திற்கு ஏற்றவாறு முழவு ஒலிக்கும் ஓசையையும் கேட்டு அவற்றை மழைபெய்யும் மேகத்தின் முழக்கம் என்று எண்ணி அஞ்சிய பெண் குரங்குகள் கலங்கி மரங்களின்மேல் ஏறி வானத்தை நோக்கி மழைதானா என்று பார்க்கும் திருவையாறு. குன்றுகளில் எல்லாம் குயில் கூவ, தேன் நிரம்பிய மலர்களில் பாய்ந்து வாசனை நிறைந்துவரும் தென்றல் காற்று அடியை வருட (பாதங்களை மெல்லத் தடவ) வயல்களில் உள்ள செழுமையான கரும்புகள் உறங்கும் திருவையாறு; தென்னை மரத்திலிருந்து முற்றிய காய் கீழே விழ, இளமையான எருமை பயந்து நீங்கி ஓடி வயல்களில் நெல்கதிர்களைக் கலக்கிவிட்டுத் தாமரை பூத்த வயலில் படியும் திருவையாறு.” இவ்வாறு ஒவ்வொரு தலத்தின் இயற்கையழகையும் கற்பனைச் சுவையோடு அமைத்துப் பாடியுள்ளார்.

ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் இராவணன் கைலை மலையைத் தூக்கி எடுக்க முயன்று துன்பப்பட்டதைப்பற்றியும் சிவபக்தன் ஆனதைப்பற்றியும் பாடுவார்; ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணமுடியாத பெருமை உடையவன் சிவபெருமான் என்பார். பத்தாம் பாடலில் சைன பௌத்தத் துறவிகளின் போலி வாழ்க்கையை எள்ளியும் கடிந்தும் கூறுவார். பதினொன்றாம் பாடலில் பாடிய தம் பெயரைப் பெருமிதத்துடன் குறிப்பிடுவார். சைனரும் பௌத்தரும் துறவறத்தையே