கிடைக்கும். ஐயமே இல்லை.” “வீரத்தின் மிடுக்கு
இல்லாத செல்வனை வீமன் அருச்சுனன் என்று புகழ்வதிலும் பயன் இல்லை; கொடுக்க மனம்
இல்லாதவனைப் பாரி என்று புகழ்ந்து கூறினாலும் கொடுப்பவர் இல்லை. மூத்துத் தளர்ந்து
உடல் நடுங்கும் கிழவனாகிய செல்வனை மலைபோன்ற தோள் உடையவன் என்று புகழ்ந்து வாழ்த்துவதால்
பயன் இல்லை. வஞ்ச நெஞ்சனை, கொடியவனை, பாவியை, கெட்டவனைச் சாது என்று கூறிப்
பாடுவதால் பயன் இல்லை. ஈயாத உலோபியை வள்ளல் என்றும், கல்வி இல்லாதவனைக் கல்வி
வல்லவன் என்றும் புகழ்ந்து காலம் கழிக்காதீர்கள். சிவபெருமானைப் பாடிப் பயன் பெறுங்கள்”
என்று புலவர்களுக்கு அறிவுரை கூறிப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்.
பக்திக் காதல்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆகிய சமயக்குரவர் நான்குபேரும் ‘நால்வர்’ என்ற எண்ணுப்பெயரால் குறிக்கப்படுவர்.
அவர்களுள் மாணிக்கவாசகர் சங்க இலக்கிய மரபை ஒட்டிக் காதல் துறைகளை அமைத்துத்
திருக்கோவையார் என்ற தனி நூலே பாடியுள்ளார். அதில் உள்ள நானூறு பாடல்களும் காதல்துறை
அமைத்துச் சிவனைப் பாடியவை. மற்ற மூவருடைய பாடல்களாகிய தேவாரத்திலும் இடையிடையே
காதல்துறையின் வாய்ப்பட்டால் அமைந்த பக்திப் பாடல்கள் பல உள்ளன. அவற்றுள்,
பாடும் அடியவர் தம்மைக் காதலியாகக் கற்பனை செய்து, சிவபெருமானைக் காதலனாகக் கொண்டு
பாடுதல் காணலாம்.
வண்டைத் தூது அனுப்பிக் காதலனுக்குச் செய்தி கூறுமாறு
வேண்டுவது வண்டுவிடுதூது என்று காதல் பாடல்களில் மரபு உண்டு. அதன்படி சம்பந்தர் ஒரு
பாட்டில் வண்டை நோக்கி வேண்டுகிறார் : “பொய்கையில் தாமரை மலரில் தேனைக்
குடித்து விட்டுப் பெண்வண்டோடு சேர்ந்து மகிழ்ந்து இசை பாடுகின்ற வண்டே! என்மேல்
இரக்கம் கொண்டு என் நாயகராகிய சிவபெருமானிடம் சென்று காதலால் ஏங்கும் என் நிலைமையை
ஒரு முறை சொல்லமாட்டாயா?”
திருநாவுக்கரசர் ஒரு பாடலில், தெய்வக் காதலால் வாழ்வு மாறிய
ஒரு காதலியின் நிலையைக் கூறும் முறையில் பின்வருமாறு எடுத்துரைக்கிறார் : “முன்பு
சிவபெருமானுடைய பெயரைக் கேட்டறிந்தாள்; பிறகு அவன் இருக்கும் இயல்பு எல்லாம் கேட்டறிந்தாள்;
பிறகு அவனுடைய தலமாகிய திருவாரூரின் சிறப்பை அறிந்தாள்; திரும்பவும் அவனுக்காகவே
பித்துப் பிடித்தவள் ஆனாள். தாயையும் தந்தையும் அன்றே விட்டுவிட்டாள். உலக
|