பக்கம் எண்: - 112 -

உடம்பெல்லாம் கண்ணாய் நெக்குருகிக் கண்ணீர் வெள்ளம் பாயவேண்டும். ஆனால் தீவினை உள்ள எனக்கோ உள்ள ஒரு நெஞ்சமும் கல்லாக இருக்கிறதே! உள்ள கண்கள் இரண்டும் உணர்ச்சி அற்ற மரமாக இருக்கின்றனவே.”

வெள்ளம்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளம்தாழ் உறுபுனலின் கீழ்மேல் ஆகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்றுஉச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
    கண்இணையும் மரமாம்தீ வினையி னேற்கே.

இவ்வளவு உருக்கமான பக்திப் பாடல்களைப் பாடிய மாணிக்கவாசகர், அக்காலத்தில் மக்களிடையே இருந்த சில நாட்டுப் பாடல் வடிவங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். சிறப்பாக, இளம்பெண்கள் ஆடிப் பாடும் பாடல் வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் விளையாடல்களுக்கு உதவும் வகையில் பக்திப் பாடல்கள் அமைத்துத் தந்திருக்கிறார். திருவாசகத்தில் உள்ள திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருத்தோணோக்கம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல் ஆகியவை அவ்வாறு பாடப்பட்டவை. பெண்கள் உட்கார்ந்து ஆடுவது அம்மானை; வாசனைப்பொடி இடித்தவாறே பாடுவது பொற்சுண்ணம்; மலர் பறிக்கும்போது பாடுவது பூவல்லி; ஊசல் ஆடும்போது பாடுவது ஊசல்; தும்பி, தெள்ளேணம், தோணோக்கம், சாழல் முதலியனவும் மகளிர் ஆடல்களைக் குறிப்பன.

பாவைப் பாடல்

மற்றொரு மகளிர்பாடல் பாவைப்பாட்டு. மார்கழி மாதத்தில் விடியற்காலையில் திருமணம் ஆகாத பெண்கள் ஒருவரையொருவர் துயில் எழுப்பி, கூட்டமாய்க் கூடி, பொய்கைக் கரைக்கச் சென்று நீராடி, பாவை வைத்து வழிபாடு நடத்திப் பாடுவது அது. மழை பெய்து நாடு நலம் பெறுவதற்காகவும், தமக்கு நல்ல கணவர் வாய்த்துத் திருமணம் நடைபெறுவதற்காகவும் கன்னிப்பெண்கள் அவ்வாறு வைகறையில் நீராடி நோன்பு நோற்பது பழங்கால வழக்கம். பக்தியியக்கக் காலத்தில் அது கடவுள் வழிபாட்டோடு ஒன்றி அமைந்தது. ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் அவ்வகையில் அமைந்த பாடல்கள்.