பக்கம் எண்: - 118 -

“கண்ணா! வந்துவிடு, வந்துவிடு. வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்யாமல் வந்துவிடு. அயல்வீட்டார் ஏதாவது பொய் சொல்லி, ஏதாவது உன்னைப்பற்றிப் பழித்துப் பேச நான் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். என் கண்ணா! இங்கே வந்து விடு” என்பது தாயின் வேண்டுகோள்.

“கரும்புச் சாற்றில் செய்த அடை, சீடை, கறுப்பு எள்ளின் உருண்டை எல்லாவற்றையும் கலத்தில் இட்டு என் வீடுதானே என்று மூடிவைத்து வந்தேன். உன்மகன் புகுந்து அவற்றை எல்லாம் தின்றுவிட்டு, மேலும் வீட்டினுள் புகுந்து உறியைப் பார்த்து வெண்ணெய் இருக்கிறதா என்று ஆராய்கிறான். இன்னும் எவ்வளவோ செய்கிறான். நான் சிலவற்றைமட்டுமே சொன்னேன். யசோதை அம்மா! உன் மகனை உன்னிடம் கூப்பிடு.” “யசோதை! உன் பிள்ளை எங்கள் வீட்டில் புகுந்து என் மகளைக் கூப்பிட்டு அவளுடைய கையிலிருந்த வளையலைக் கழற்றிக்கொண்டுபோய், கொல்லையில் அங்கே நாவல் பழம் விற்ற ஒருத்திக்கு அந்த வளையலைக் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த நாவல் பழங்களை வாங்கிக் கொண்டு, நான் அல்ல என்று சிரிக்கிறானே.” இவை அயல்வீட்டு மகளிர் முறையீடு.

“கேசவா! கண்ணா! இங்கே வந்துவிடு. மாட்டேன் என்று மறுக்காமல் வா. நம்மிடம் அன்பு இல்லாத அயலாரின் வீட்டுக்குப் போய் நீ விளையாடாதே. வேண்டுமென்றே பழிச்சொல் கூறும் கெட்ட பெண்களும் ஆண்களும் உள்ள இடத்திற்கு நீ போகாதே! தாய்ச் சொல்லைக் கேட்பது தருமம். கண்ணா! இங்கே வந்துவிடு” என்கிறாள் யசோதை.

கண்ணன் செய்த தீம்புகளைமட்டும் ஆயர் மகளிர் யசோதையிடம் கூறும் சொற்களாக ஆழ்வார் தனியே பாடல்கள் பாடியுள்ளார். “ஆற்றில் இருந்து விளையாடிக்கொண்டிருந்த எங்களைச் சேற்றால் எறிந்து எங்கள் வளையல்களையும் ஆடைகளையும் எல்லாம் எடுத்துக்கொண்டு காற்றைவிட வேகமாக ஓடி வீட்டுக்குள் புகுந்து கொண்டான். கேட்டால் ஒரு சொல்லும் வாய் திறந்து பேசவில்லை. இன்று முழுநாளும் இப்படியே இருக்கிறானே.” “தெருவில் ஆய்ச்சியர் வீடுகளில் வெண்ணையும் தயிரும் பாலும் உண்டு, அவர்கள் கண்டுபிடிக்க அகப்பட்டுக்கொண்டு, கட்டப்பட்டுக் கிடந்தான் இன்று முழுதும். அடிபட்டு அழுதான் இன்று முழுதும்.”

ஆற்றில் இருந்து விளையாடு வோங்களைச்
சேற்றால் எறிந்து வளைதுகில் கைக்கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத்திறம் பேசானால் இன்று முற்றும